சிறிலங்காவின் பிரதமராக கோட்டாபய ராஜபக்ச..! ஆட்சேபிக்கப் போவதில்லை என்கிறது மொட்டுக்கட்சி
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச இலங்கை வந்தவுடன் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருந்தால் தாம் ஆட்சேபிக்கப் போவதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் பிரதீப் உந்துகொட ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
6.9 மில்லியன் மக்களின் ஆதரவுடன் கோட்டாபய ராஜபக்ச அதிபராக தெரிவு செய்யப்பட்டதாக தெரிவித்த அவர்கள், கோட்டாபய ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படுவது எவராலும் ஆட்சேபிக்கப்பட போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
நாடு திரும்பும் கோட்டாபய
மக்கள் புரட்சியை தொடர்ந்து சிறிலங்காவில் இருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து கடந்த 11 ஆம் திகதி தாய்லாந்து சென்றிருந்தார்.
இந்நிலையில், தாய்லாந்தில் உள்ள கோட்டாபய ராஜபக்ச அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் விஜயத்திற்கு பின்னர் சிறிலங்கா வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சிறிலங்கா திரும்பும் கோட்டாபய மீண்டும் அரசியலில் ஈடுபடுவார் எனவும் பிரதமராக நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.