அரசியலமைப்பு பேரவை ரப்பர் சீலுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல : சஜித் கண்டனம்
அரசியலமைப்பு பேரவை பாதுகாக்கின்ற போதைப்பொருள் வியாபாரி யார் என்பதை நாங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(20) சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
யாருடைய தேவைக்காகவும் காவல்துறைமா அதிபரை நியமிக்க அரசியலமைப்பு பேரவை தயார் இல்லை. அத்துடன் அதிபரிடமிருந்து வரும் அனைத்து விடயங்களுக்கும் ஆமாம் சாமி போட அரசியலமைப்பு பேரவை ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொறுப்புக்கூறல்
இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“அரசியலமைப்பு பேரவை காவல்துறைமா அதிபர் ஒருவரை 3 தடவைகளும் நியமிக்காமல் இருப்பது போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் தேவைக்காகும் என அரச ஊடகங்கள் இரண்டு செய்தி வெளியிட்டிருக்கிறது.
அரசாங்கத்தினால் நிறுவகிக்கப்படுகின்ற, அதிபர் பொறுப்புக்கூற வேண்டிய 2 நிறுவனங்களே இந்த செய்தியை வெளியிட்டிருக்கின்றன.
அதனால் அரசியலமைப்பு பேரவை பாதுகாக்கின்ற போதைப்பொருள் வியாபாரி யார் என்பதை நாங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
அதற்காக இந்த பத்திரிகைகளின் ஆசிரியர்களை நாடாளுமன்றத்துக்கு அழைத்து இது தொடர்பாக கேட்கவேண்டும்.
நீதவான் சரவணராஜா விவகாரம் : அரச ஊடகங்கள் குறிப்பிடும் புலனாய்வு பிரிவின் அறிக்கை எந்தளவிற்கு உண்மையானது!
அரசியலமைப்பு பேரவை
அரசியலமைப்பு பேரவை யாருடைய தேவைக்கும் காவல்துறைமா அதிபர் நியமிக்க தயார் இல்லை.
போதைப்பொருள் வியாபாரிகளை பாதுகாப்பவர்களையோ உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை நியமிக்கவும் நாங்கள் தயார் இல்லை.
ஆனால் நிலையான காவல்துறைமா அதிபர் ஒருவரை நியமிக்க அதிபர் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அதிபரின் கோரிக்கையை ஏற்று, 2 தடவைகள் பதவி நீடிப்புக்கு அனுமதியளித்தோம். அதனால் அரசியலமைப்பு பேரவை ரப்பர் சீலுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல.
எனவே அரசியலமைப்பு பேரவை போதைப்பொருள் வியாபாரிகளை பாதுகாப்பதாக அரச பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி, அரசிலமைப்பு பேரவை உறுப்பினர்களான சபாநாயகர், பிரதமர், அதிபரின் பிரதிநிதி, மொட்டு கட்சியின் பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவரான எனக்கு, கபீர் ஹாசிம் மற்றும் சிவில் அமைப்பு 3 பேருக்கு எதிரான பாரிய குற்றச்சாட்டாகும்.
அதனால் இந்த பத்திரிகை ஆசிரியர்களுக்கு எதிராக நாங்கள் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்போம்.” என்றார்.