யாழ். திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்துக்குள் நுழைகிறது புத்தசாசன அமைச்சு!
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையம் தொடர்பான நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு கடந்த (11.05.2026) திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 பெப்ரவரி 21 ஆம் திகதி நடைபெற்ற, அமைச்சரவைக் கூட்டத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில், யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தை பராமரித்து முன்னெடுத்து செல்லும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தது.
முகாமைத்துவ நடவடிக்கைகள்
குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம், கலாச்சார மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் நிர்வாகம் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக ஒருங்கிணைந்த முகாமைத்துவக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், திட்ட நிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர், கலாச்சார மத்திய நிலையம் இலங்கை அரசாங்கத்தின் ஊடாக யாழ். மாநகர சபைக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மத்திய நிலையத்தின் முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுக்க நம்பிக்கைப் பொறுப்பு நிதியமொன்றை உருவாக்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்புறுதி வரைவு ஆவணத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அனுமதி
யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் நிர்வாக மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தை நிறுவ அமைச்சரவை அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, இந்த நடவடிக்கையின் மூலம் இதுவரை தனித்துவமான நிர்வாக அமைப்பின் கீழ் இயங்கிய திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையம், இனி நம்பிக்கை நிதியத்தின் ஊடாக புத்தசாசன அமைச்சின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்படும் சூழல் உருவாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |