உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பாரிய வீழ்ச்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என சர்வதேச எரிசக்தி முகவர் நிலையம் எதிர்வு கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச எரிசக்தி முகவர் நிலையம் புதன்கிழமை வெளியிட்ட தனது மாதாந்த எண்ணெய் சந்தை அறிக்கையில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.
அதன்படி, மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக, 2026 ஆம் ஆண்டு முழுவதும் உலகளாவிய எண்ணெய் விநியோகம் நாளொன்றுக்கு 3.9 மில்லியன் பீப்பாய்களால் குறையும் என சர்வதேச எரிசக்தி முகவர் நிலையம் கணித்துள்ளது.
விநியோக இழப்பு
இந்த ஆண்டில் உலகளாவிய எண்ணெய் தேவை நாளொன்றுக்கு 420,000 பீப்பாய்களால் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், விநியோக இழப்பு அதனை விட மிக அதிகமாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் போர் ஆரம்பமாகி 10 வாரங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை ஊடாக விநியோகம் தடைப்பட்டுள்ளமையால் உலகளாவிய எண்ணெய் இருப்பு சாதனை வேகத்தில் குறைவடைந்து வருகின்றது.
தொடர்ச்சியான விநியோகத் தடைகளுக்கு மத்தியில் எண்ணெய் இருப்பு வேகமாகச் சுருங்குவதால், எதிர்காலத்தில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயரக்கூடும் என சர்வதேச எரிசக்தி முகவர் நிலையம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |