2.5 மில்லியன் டொலர் மோசடி : மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய அறிவிப்பு
நிதி அமைச்சிற்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடிக்காரர்களின் கைக்குச் சென்ற சம்பவம் தொடர்பாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மீண்டும் இவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் இருக்க மத்திய வங்கியும் நிதி அமைச்சும் நெருக்கமாகச் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (13) மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மத்திய வங்கிக்கு பொறுப்பு
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நிதி அமைச்சுடன் இணைந்து நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறோம்.

இந்த முறையை எவ்வாறு பலப்படுத்தலாம் என்பது குறித்தும், எங்களது அனுபவம் மற்றும் அறிவைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் எனக் குறிப்பிட்டார்.
அத்துடன் இதன்போது மத்திய வங்கிக்கு ஏதேனும் ஒரு இடத்தில் 'Cross-check' செய்யும் பொறுப்பு வருகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அவுஸ்திரேலியாவிலுள்ள நிறுவனம்
இதற்குப் பதிலளித்த ஆளுநர், "இல்லை ஒரு எளிய உதாரணம் என்னவென்றால், எனது வங்கிக் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட நபரின் கணக்கிற்குப் பணம் செலுத்துமாறு வங்கிக்கு நான் உத்தரவிடும்போது, கணக்கு இலக்கம் சரியாக இருந்து, முறைமை ஊடாகப் பணம் செலுத்தப்படுமானால், அதனைச் செய்வது மட்டுமே வங்கியின் வேலையாகும்.

அதற்கு அப்பால் சென்று அந்த அறிவுறுத்தல்களை மாற்றுவதற்கு வங்கிக்கு உரிமை இல்லை. வங்கியாளர் என்ற ரீதியில் எமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மாற்றுவதற்கு எமக்கும் உரிமை இல்லை. பணம் செலுத்திய பின்னர் அது நிகழ்ந்துவிடும்.
அதன் பின்னர் மறுமுனையில் பணம் சென்றடைந்ததா இல்லையா என்பதை 'Statement' மூலம் பார்ப்பதற்கு எமக்கு வசதி இல்லை. அந்த 'Statement' அவுஸ்திரேலியாவிலுள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கே கிடைக்க வேண்டும்." என அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |