ஒரு மக்கள் பிரதிநிதி தெருச்சண்டியன் போல அடிபிடிப்படுவதுதான் நியாயமா ?
ஒரு சிலர் அங்குமிங்குமாக அந்த வைத்தியரின் பக்க நியாயம் என்று குடைபிடித்து ஓடித்திரிகிறார்கள் நாம் நியாயத்தை எங்கு பேசவேண்டும்.
நியாயம் என்பது எதனடிப்படையிலானது, என்னாதான் நியாயத்தை பேசிக்கொண்டாலும் ஒருவர் பொதுவெளியில் நடந்துகொள்கின்ற முறை என்று ஒன்று இருக்குமல்லவா?
என்னைப்போன்ற ஒரு சாமான்யன் இப்படி நடந்துகொள்ளவதே அருவருக்கத்தக்கது என்கின்ற போது ஒரு கூட்டம் தங்கள் ஆதர்சன நாயகனாக கொண்டாடும் ஒருவர் ஒரு மாவட்டத்தினுடைய நாடாளுமன்ற பிரதிநிதி பொதுவெளியில் நடந்துகொள்வதற்கு என்று ஒரு முறை இல்லையா ?
ஒரு மனிதனுக்கு கோபம் என்ற உணர்வு வழமையானதுதான் ஆனால் அதை பொதுவெளியில் கட்டுப்படுத்த முடியாத ஒருவர் ஒரு சமூகத்தை வழிநடத்தக்கூடிய ஒருவர்தானா? என்பதுதான் இங்கு எழும் கேள்வி.
கோபம் ரோசம் வெட்கம் இவையெல்லாம் எல்லா இடத்திலும் வெளிப்படுத்த முடியுமா? சில சந்தர்ப்பங்களை சரியாக கையாள முடியாத ஒரு ஆளுமையற்ற தன்மையால்தான் இப்படியான எதிர்வினைவுகளை ஆற்ற முடியும். தனிப்பட்ட மனிதனையும் சமூகத்தை வழி நடத்த தன்னை முன்னிறுத்தியவரையும் ஒன்றாக நோக்க முடியுமா?
அன்றைய நாள் வைத்தியர் அர்ச்சுனா செய்ததுதான் சரி அவருக்கான தனிப்பட்ட உணர்வின் பிரகாரம் அவர் அவ்வாறு நடந்து கொண்டார் என்பீர்களானால், ஏனைய அரசியல்வாதிகளை எப்படி விமர்சிக்க முடியும் ஒன்று மட்டும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது.
நியாயமான விமர்சனங்களுக்கு அப்பால் அவர் யாழ் தேர்தல் மாவட்டத்தை சேர்ந்த யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் கிளிநொச்சி (Klinochchi) மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதி, அவரின் நடத்தை செயற்பாடு அந்த இரு மாவட்ட மக்களினையும் பிரதிபலிக்கும் ஒரு சூழல் நமக்கு சாதகமில்லை.
அவர்கள் நம்மை வேண்டுமென்றே வம்பிழுக்கிறார்கள் என்றால் அந்த இடத்தில் இருந்து தன்னை சுதாகரித்து நடந்திருக்க வேண்டியதுதான் ஒரு தலைமையின் பண்பு.
அதைவிடுத்து அடிபிடுப்பட்டு ஒரு காவாலியைப்போல நடந்து கொள்வதுதான் வீரம் என மார்தட்டுவதும் சாப்பிடும் போது வம்பிழுத்தால் கோவம் வரும் என்று ஆளாளுக்கு காவித்திரிந்து ஒரு பொதுமகனின் பொறுப்போடு நடந்திருக்க வேண்டிய நடத்தையை பொறுப்பற்று தெருச்சண்டியன் போல நடந்துகொண்டதை நியாயப்படுத்துவதும் ஒரு கீழ்த்தரமான மனநிலையே.
ஒரு சமூகத்தை வழிநடத்த தன்னை முன்னிறுத்த ஒருவன் தயாரானால் அவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற வரையறை இருக்க வேண்டுமல்லவா அதைவிடுத்து என்னைப்போலவும் உங்களைப்போலவும் நடந்து கொள்ளக்கூட முடியாத ஒருவராக ஒரு கூட்டுப்பொறுப்பை சுமக்க வேண்டிய ஒருவரின் நடத்தை எழுந்தமானமாக இருந்துவிட முடியுமா?
எல்லாவற்றிற்கும் மேல் அன்று அவர்கள் கேலிபேசினார்கள் என்றால் அப்படியாக கேலிபேச வேண்டிய நிலமைக்கு அழைத்து வந்தது யார் ?
தங்கத்தை தேடி தன்னை பிரபல்யப்படுத்தினாரா அல்லது அறியாமையின் பால் கமராக்கண்களுக்கு முன் அப்படி நடந்துகொண்டாரா என்ற கேள்வியை கேட்டுப்பாருங்கள்.
மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தவேண்டியது அவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல. அவர் 16000 இற்கும் அதிகமான வாக்காளர்களின் பிரதிநிதி என்பதே அங்கு இழக்கப்பட்டது அல்லது மலினப்படுத்தப்பட்டுப்போனது என்பது அந்த மக்களின் கௌரவமுமே என்பதை நினைத்தாகவேண்டும்.
“ஆடம்பரவிடுதியில் அடிபிடிப்பட்ட யாழ் எம்பி “ இப்படி ஒரு தலைப்பு நாளை சிங்களப்பத்திரிகையிலோ ஆங்கிலப்பத்திரிகையிலோ வெளியானால் அது ஈழத்தமிழரின் வீரப்பிரதாபம் என்று மார்தட்டுவீர்களா?
நியாயங்கள் பேசப்படவேண்டும் ஆனால் அதற்கு ஒரு இடம் பொருள் ஏவல் இருக்கவேண்டாமா?
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)