ஈரான் அமைச்சரை கைது செய்யுமாறு இலங்கையிடம் ஆர்ஜென்டினா கோரிக்கை!
இலங்கைக்கு பயணம் செய்துள்ளதாக சந்தேகிக்கப்பட்ட ஈரானிய (Iran) உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹிதியை (Ahmad Vahidi) கைது செய்யுமாறு ஆர்ஜென்டினா (Argentina) கோரியுள்ளது.
எனினும், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் (Ebrahim Raisi) குறித்த அமைச்சர் இலங்கைக்கு (Sri Lanka) பயணம் செய்யவில்லை என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யூத சமூகத்தின் மீதான தாக்குதல்
கடந்த 1994 ஆம் ஆண்டு ஆர்ஜென்டினாவின் தலைநகரில் யூத சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 85 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஈரானின் தற்போதைய உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹிதியே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.
இந்த அமைச்சர் ஈரான் அதிபருடன், பாகிஸ்தான் சென்ற பின்னர் இலங்கை வருவதற்கு திட்டமிட்டிருந்தார். எனினும், அவரை கைது செய்ய வேண்டும் என இன்டர்போல் (Interpol) எனப்படும் சர்வதேச காவல்துறையினர் அறிவிப்பொன்றை விடுத்திருந்தனர்.
கைது நடவடிக்கை
ஆர்ஜென்டினாவின் வேண்டுகோளையடுத்து இன்டர்போல் இந்த அறிவிப்பை விடுத்தது. இதன்படி, இலங்கையும், பாகிஸ்தானும் ஈரானின் உள்துறை அமைச்சரை கைது செய்ய வேண்டும் என ஆர்ஜென்டினா கோரியிருந்தது.
எனினும், அஹ்மத் வஹிதி செவ்வாய்கிழமை (23) ஈரானுக்கு திரும்பியுள்ளதாக ஈரானின் அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை வந்த ஈரானிய தூதுக்குழுவில் அந்த நாட்டு உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹிதி இருக்கவில்லை என இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |