அநுரவிற்கு ஆலோசனை வழங்க உதவி கோரும் அர்ஜூன் மகேந்திரன் : 03 வருடங்களுக்கு பின்னர் வெளியான புகைப்படம்
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக தேடப்பட்டு வரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் சமீபத்திய புகைப்படத்தை தென்னிலங்கையின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் குறித்த புகைப்படத்தைப் பகிர்ந்த குறித்த பத்திரிகையாளர், மகேந்திரன் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தன்னைத் தொடர்பு கொண்டதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட பதிவில்,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் ஆலோசனை
மகேந்திரன் தன்னிடம் பல விடயங்களைப் பற்றிப் பேசியதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் ஆலோசனை வழங்குமாறு கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் வசிக்கும் மகேந்திரன், 2015 ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். இது அரசுக்கு பாரிய நிதி இழப்பை ஏற்படுத்திய சம்பவமாக காணப்பட்டது.
திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவென சென்றவர்தான்
சர்ச்சையைத் தொடர்ந்து மகேந்திரன் இலங்கையை விட்டு வெளியேறியபோது, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில், ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள சிங்கப்பூர் செல்வதாகவும், விரைவில் திரும்பி வருவேன் என்றும் மகேந்திரன் தனக்குத் தெரிவித்ததாகக் கூறினார்.
இருப்பினும், மகேந்திரன் ஒருபோதும் நாடு திரும்பவில்லை.
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள மகேந்திரனை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவதாக உறுதியளித்தார்.
இருப்பினும், இருதரப்பு ஒப்படைப்பு ஒப்பந்தம் இல்லாததைக் காரணம் காட்டி, சிங்கப்பூர் முன்னர் இலங்கையின் ஒப்படைப்பு கோரிக்கையை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
