அர்ஜூன மகேந்திரனை கைது செய்ய தொடர் முயற்சி : அரசாங்கம் உறுதி!
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை (Arjuna Mahendran) கைது செய்யும் முயற்சியை கைவிடவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
அத்டதன் அதற்கான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சட்ட திட்டங்களால் தடை
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் இலங்கைக்கு அத்தியாவசியமான ஒருவர் என்பதை அந்நாட்டிற்கு அறிவித்துள்ளோம்.
அவர் தனது பெயரை மாற்றம் செய்து சிங்கப்பூர் பிரஜையாக அந்நாட்டில் வசித்து வருகிறார்.
அர்ஜூன மகேந்திரனை கைது செய்வதில் அந்நாட்டின் சட்ட திட்டங்களின் அடிப்படையில் ஒரு சில தடைகள் காணப்படுகின்றன” என தெரிவித்தார்.
மத்திய வங்கி பிணைமுறி
இதேவேளை, 2015 ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் அரசாங்கத்திற்கு 10 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த 26 ஆம் திகதி கொழும்பு தலைமை நீதிபதி அசங்க எஸ். போதரகம முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்படி, குறித்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
