வடக்கில் விடுவிக்கப்பட்ட இராணுவ முகாம்: அநுரவை எச்சரிக்கும் நாமல்
இராணுவ முகாம்களை விடுவிப்பதில் வட மாகாணமாக இருந்தாலும் தென் மாகாணமாக இருந்தாலும் தேசிய பாதுகாப்பு பேணப்படுவது மிகவும் முக்கியமானது என நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவ முகாமொன்று விடுவிக்கப்பட்டமை குறித்து இன்று (20) தனது எக்ஸ்(X) பக்கத்தில் இட்ட பதிவொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்பட்ட இராணுவ முகாம்
அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கில் இராணுவ முகாம் ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு காணிகளை வழங்குவதற்காக இன்னும் பல இராணுவ முகாம்கள் எதிர்வரும் மாதங்களில் விடுவிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு தரப்பினருடன் கலந்தாலோசித்து காணிகளை விடுவிப்பது பிரச்சினையல்ல என்றாலும், தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்யும் வகையில் அதனை செய்யக்கூடாது.
30 ஆண்டுகால பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடிய இலங்கை இன்று ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து சுதந்திரத்தை அனுபவிக்கிறது.
எனவே வட மாகாணமாக இருந்தாலும் தென் மாகாணமாக இருந்தாலும் தேசிய பாதுகாப்பு பேணப்படுவது மிகவும் முக்கியமானது.“ என அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவ முகாம்
இதேவேளை, யாழ். வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலைமையகமத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றிலிருந்து (18) பதின்நான்கு நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |