சிறிலங்கா இராணுவத்தினர் சென்ற வாகனம் மரத்தில் மோதி விபத்து : ஐவர் படுகாயம்
சிறிலங்கா இராணுவத்தினர் சென்ற வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அம்பாறை, மஹாஓயாவிலிருந்து மின்னேரியா நோக்கிச் சென்ற மின்னேரியா பீரங்கி பயிற்சிப் பாடசாலையைச் சேர்ந்த டிஃபென்டர் ரக ஜீப், நேற்று (20 ) ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
மரத்தில் மோதி வாகனம் விபத்து
மனம்பிட்டிய, குடாவெவ பகுதியில் சாலையை விட்டு விலகி சைப்ரஸ் மரத்தில் மோதி வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனத்தில் பயணித்த ஐந்து வீரர்கள் காயமடைந்து பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மனம்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு வீரர்களை பொலனறுவை மருத்துவமனையிலும், மீதமுள்ள மூவரை மனம்பிட்டிய மருத்துவமனையிலும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை அதிகாரிகள் குழு மேலதிக விசாரணை
விசாரணைகளை மேற்கொண்ட மனம்பிட்டிய காவல்துறையினர், மஹாஓயா பகுதியில் ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுவிட்டு மின்னேரியாவுக்குத் திரும்பும் போது இந்த விபத்தை சந்தித்ததாகக் கூறினர்.
விசாரணையை நடத்தி வரும் மனம்பிட்டி காவல்துறைப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் அசேல சரத் குமார, தாங்கள் நடத்திய விசாரணையில், ஓட்டுநர் தூங்கிவிட்டதே விபத்துக்கான காரணம் என்று குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் டிஃபென்டரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து குறித்து மனம்பிட்டிய காவல்துறைப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் அசேல சரத் குமார உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
