ஊடகவியலாளரை அச்சுறுத்தியவர்களை கைது செய்க! நாடாளுமன்றத்தில் சாணக்கியன் இடித்துரைப்பு
பிள்ளையானின் ஆதரவாளர்கள் இரண்டு ஊடகவியலாளர்கள் மீது முகநூலில் அவதூறு பரப்பி அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இரண்டு ஊடகவியலாளர்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்களால் முகநூலில் அவதூறு பரப்பி அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் பேசிய போதே சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர்,
அண்மைக்காலமாகவே ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களான புண்ணியமூர்த்தி சசிகரன், செல்வக்குமார் நிலாந்தன் ஆகிய இருவருக்கும் எதிராக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின்(பிள்ளையானின்) ஆதரவாளர்கள் ஊடகவியலாளர்களின் புகைப்படங்கள் அவர்களது குடும்பங்களின் புகைப்படங்களை போட்டு மிகவும் கேவலமாக, மோசமான முறையில் எழுதி வருகின்றனர்.
இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டக்களப்பு சிரேஸ்டகாவல்துறை அத்தியட்சகருக்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர்.
இதனை கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து காவல்துறை மா அதிபரது கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இது குறித்து விரைவில் பதிலளிப்பேன் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்ததாக சாணக்கியன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


