புதுக்குடியிருப்பில் கொள்ளை மற்றும் வாள்வெட்டு சம்பவங்கள்- காவல்துறையினரின் நடவடிக்கை!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கடந்த வாரத்தில் மூன்று கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.
கடந்த 16 ஆம் திகதி தேவிபுரம் பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தி வயோதிப தம்பதிகளை காயப்படுத்திவிட்டு தாலியினை கொள்ளையடித்து சென்றுள்ளமை மற்றும் விசுவமடு பகுதியில் நகை அறுப்பு, புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் நகை கொள்ளை போன்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர் .
மேலும் அவர்களிடம் இருந்து கொள்ளை சம்பவங்களின் போது
பயன்படுத்தப்பட்ட வாள்களும் , கொள்ளையிட்ட தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த கொள்ளைச்சம்பத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடிவருவதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
கொள்ளையிடப்பட்ட நகைகள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் விற்பனையினை மேற்கொண்ட பெண் ஒருவர் உள்ளிட்ட 6 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
