மலையக மக்களின் வருகை வடக்கு - கிழக்கிற்கு சாதகமா.. பாதகமா..
மலையக மக்களை வடக்கு - கிழக்கில் குடியமர்த்தல் என்ற விடயம் அண்மைய நாட்களாக பேசுபொருளாக காணப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனின் கருத்து மூலம் இந்த விடயம் பேசுபொருளானது.
அவரின் இந்த கருத்திற்கு வடக்கு - கிழக்கு அரசியல் பிரமுகர்களும் ஆதரவு வழங்கும் வகையில் மலையக மக்களை இன்முகத்துடன் வரவேற்பதாக கூறினர்.
பின்னர், புலம்பெயர் தேசங்களில் இருங்கின்ற மக்கள் தமது காணிகளை மலையக மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கருத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் கூறியபோதே சர்ச்சை ஆரம்பித்தது.
வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஆசனங்கள் எத்தனை? தற்போது அது குறைவடைந்துள்ளது.
சனத்தொகை பெருக்கம்
நாடளாவிய ரீதியில் உள்ள சனத்தொகை கணிப்பீட்டின் மூலமே மாவட்டங்களுக்கான ஆசனங்கள் ஒதுக்கப்படும்.
யுத்தத்தினால் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாலும், பல இலட்சம் மக்கள் புலம்பெயர் தேசங்களை நோக்கி நகர்ந்ததாலும் சனத்தொகை குறைந்ததால் நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஆசனங்கள் வடக்கு - கிழக்கில் குறைவடைந்துள்ளது.
இது எதிர்கால இன்னும் குறைவதற்கும் வாய்ப்புள்ளது. வடக்கு - கிழக்கிற்கான நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஆசனங்களை அதிகரித்தல் என்பது வடக்கு கிழக்கு மக்களால் இனிமேல் முடியாத காரியம்.
ஏனெனில் சனத்தொகை பெருக்கம் என்பது அந்த அளவிற்கு அதிகரிக்கவில்லை. மாறாக குறைவடைந்தே செல்கிறது. இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஆபத்தான விடயமாகவே பார்க்கப்படுகிறது.
மலையக மக்களை வடக்கு - கிழக்கில் குடியமர்த்துதல் என்பது மலையக மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கின்ற நல்ல விடயம் என்பதற்கு அப்பால் அரசியல் ரீதியாக பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமாக இருப்பதை உற்று நோக்கக்கூடியவாறு உள்ளது.
இதன்மூலம் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கான குரல்கள் மேலும் வலுவடையக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம்.
மலையக மக்களை வடக்கு - கிழக்கில் குடியமர்த்துவதை எந்தவொரு அரசாங்கமோ, இனவாத சிந்தனை கொண்ட சிங்கள அரசியல்வாதிகளோ, முதலாளிமார்களோ அல்லது மலையக அரசியல்வாதிகளோ விரும்பமாட்டார்கள்.
வடக்கு - கிழக்கு தமிழர்கள்
ஏனெனில் இவ்வாறு அவர்களை வடக்கு கிழக்கில் குடியமர்த்தினால் அது வடக்கு - கிழக்கு தமிழர்களுக்கு சாதகமாக அமையும் என்பதே விடயம்.
வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்த எந்தவொரு அரசாங்கங்களும், இனவாத சிந்தனையுடையவர்களும் விரும்ப மாட்டார்கள்.
மலையக அரசியல்வாதிகள் எந்த வகையில் இதை விரும்பமாட்டார்கள் என பார்ப்போமேயானால், அவர்களின் அரசியல் இருப்பு கேள்விக்குட்படுத்தப்படும்.
அங்கு இருக்கின்ற பெரும்பாலான அரசியல்வாதிகள் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் கஷ்ட நிலையை வைத்தே அரசியலில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு இருக்கையில் மக்களது கஷ்டம் தீர்ந்தால் அவர்கள் அரசியல் செய்வது கடினம். மேலும், அந்த மக்களை வடக்கு - கிழக்கில் குடியேற்றில் மலையகத்தில் சனத்தொகை குறையும்.
இதனால் அங்கு தற்போது இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசன ஒதுக்கீடு நிச்சயமாக குறையும். இதனால் மலையக அரசியல்வாதிகளினும், அவர்களது பரம்பரையினரதும் அரசியல் இருப்பு கேள்விக்குட்படுத்தப்படும்.
தங்களது அரசியல் கேள்விக்குட்படுத்தப்படுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
மலையக மக்களை வடக்கு - கிழக்கில் குடியமர்த்துவதை முதலாளிமார்கள் ஏன் விரும்ப மாட்டார்கள் என்று பார்ப்போமேயானால், அங்கு இருக்கின்ற முதலாளிமார்கள் தோட்டங்களில் வேலை செய்கின்ற மக்களுக்கும், கூலித் தொழிலாளர்களுக்கும் குறைந்த ஊதியத்தை வழங்கியே தாங்கள் கொள்ளை இலாபத்தை பெறுகின்றனர்.
மலையக மக்கள் மலையகத்தை விட்டு சென்றால் முதலாளிமார்களது தொழில்கள் கேள்விக்குட்படுத்தப்படும்.
பூர்வீக நிலங்கள்
தோட்டங்களில் வேலை செய்பவர்களை வேலைக்கு எடுப்பது சிரமாகும், வேறு ஆட்களை வேலைக்கு எடுத்து பயிற்சி வழங்கி தொழிலுக்கு அமர்த்தினாலும் அவர்கள் குறைந்த சம்பளத்திற்கு அந்த கடுமையான வேலையை செய்ய மாட்டார்கள்.
அப்படியே செய்தாலும் அதிக சம்பளம் வழங்க வேண்டும். இவ்வாறான நிலைமைகளை கருத்தில் கொண்டுதான் மேற்பட்ட தரப்பினர் மலையக மக்கள் வடக்கு - கிழக்கிற்கு செல்வதை விரும்ப மாட்டார்கள்.
ஆனால் மலையக மக்களுக்கு தாங்கள் நல்லது செய்வது போன்ற போர்வையில் கருத்துக்களை கூறுவார்கள்.
அதாவது, மலையக மக்கள் பூர்வீக நிலங்களை விட்டு போக மாட்டார்கள், அவர்கள் இங்கேதான் வசிப்பார்கள் என்ற தந்திரோபாயமான கருத்துக்களை கூறுவார்கள்.
அவர்களது இந்த கருத்துக்களின் உள்நோக்கம் அறியாமல் மலையக மக்களும், இது தமக்கு ஆதரவாக கொடுக்கப்படுகின்ற குரல் என நம்பி ஏமாறுவார்கள்.
மலையக மக்களுக்கு புலம்பெயர் தேசங்களில் வசிக்கின்ற வடக்கு - கிழக்கு உறவுகள் காணிகளை வழங்க முன்வரவேண்டும் என்பது ஒரு உள்நோக்கத்தை கொண்ட கருத்தாகவே உற்று நோக்கப்படுகிறது.
ஏனெனில் வடக்கு - கிழக்கு தமிழர்கள் தங்களது பூர்வீகம் மற்றும் உரிமைகள் வேறு எவருக்கும் சென்றுவிடக்கூடாது என்ற சிந்தனையில் உள்ளவர்கள்.
அதனை 30 வருட காலமாக நடைபெற்ற ஆயுதப் போராட்டமும் தற்போது இடம்பெறுகின்ற அகிம்சைவழி போராட்டங்களும் எடுத்துக்காட்டுகிறது.
வடக்கு - கிழக்கை பூர்வீகமாகக் கொண்ட புலம்பெயர் தமிழர்களிடம் நிலங்களை கோருகின்றபோது அவர்களில் பலர் அதனை வழங்குவதற்கு மறுப்பாளர்கள்.
இதன்போது, வடக்கு - கிழக்கு மக்கள் மலையக மக்கள் தமது பிரதேசங்களில் குடியமர்வதை விரும்பவில்லை என்ற விம்பம் தோற்றுவிக்கப்படும்.
விரும்பாத வடக்கு - கிழக்கு
தாங்கள் குடியேறுவதை விரும்பாத வடக்கு - கிழக்கு மக்கள், தங்களை எவ்வாறு நல்லவிதமாக நோக்குவார்கள் என்ற சிந்தனையில் வடக்கு - கிழக்கில் குடியேறுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
இங்கேதான் பலதரப்பட்டவர்களுடைய தந்திரோபாயமான சிந்தனைகள் நிறைவேற்றப்படும். வடக்கு - கிழக்கில் புலம்பெயர் தேசங்களில் வசிக்கின்ற உறவுகளது காணிகள் மாத்திரம் அல்ல, பல்லாயிரம் ஏக்கர் கணக்கான அரச காணிகள் உள்ளன.
மலையக மக்கள் உண்மையிலேயே கஷ்டங்கள், துன்பங்கள் இன்றி சந்தோஷமாக வாழவேண்டும் என்ற சிந்தனை உடையவர்கள் ஏன் அரச காணிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்க கூடாது?
அவ்வாறான கருத்துப்பட ஏன் ஒரு கோரிக்கையை இதுவரை முன்வைக்கவில்லை?
அப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்து, அரசாங்கம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாமே?
அவ்வாறு கோரிக்கை முன்வைக்கின்றபோது அரசாங்கம் அந்த கோரிக்கையை மறுத்தால், ஒரு கட்டத்தில் வடக்கு - கிழக்கு மக்களும் மலையக மக்களுக்கு அரச காணிகளை வழங்குமாறு குரல் கொடுப்பதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளது.
ஏனெனில் வடக்கு - கிழக்கில் உள்ள காணிகள் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டு அங்கு சட்டவிரோத விகாரைகள், இனவாத ரீதியான செயற்பாடுகள் கனகச்சிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு எதிராக வடக்கு - கிழக்கு மக்கள் தினம்தினம் போராட வேண்டிய தேவை காணப்படுகிறது. என்று தமது உடைமைகள் பறிபோகுமோ என்ற அச்சத்தில் வாழக்கூடிய சூழ்நிலை அதிகரித்து செல்கிறது.
மலையக மக்களை அந்த காணிகளில் குடியமர்த்தினால் வடக்கு - கிழக்கு மக்கள் ஓரளவு அச்சத்தில் இருந்து விடுபடக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன.
மேலும் நிலம், மொழி, மதம் என்பவற்றை உள்ளடக்கிய தமிழ் தேசியம் சார்ந்த அகிம்சை வழியிலான செயற்பாடுகளுக்கு மலையக மக்களும் ஒரு கட்டத்தில் தோள்கொடுப்பார்கள்.
இது உரிமை போராட்டத்தில் ஈடுபடும் வடக்கு - கிழக்கு தமிழர்களுக்கு உறுதுணையாக அமையும்.
வடக்கு - கிழக்கில் உள்ள அரச காணிகளில் மலையக மக்களை குடியமர்த்துவதன் மூலம் ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்த முடியும். அதாவது, மலையக மக்களது கஷ்டம் நீங்கும்.
உயிர் அச்சம்
அவர்கள் இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் உயிர் அச்சம் இன்றி வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படும். வடக்கு - கிழக்கு தமிழர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படும்.
வடக்கு - கிழக்கு மக்களின் உரிமைக் குரல் வலுப்பெறும். வடக்கு - கிழக்கில் நாடாளுமன்ற ஆசனங்கள் அதிகரிக்கும். சட்டவிரோத விகாரைகள் அமைத்தல், இனவாத ரீதியான குடியேற்றங்கள் தடுக்கப்படும்.
வடக்கு - கிழக்கு தமிழர்களை மலையக மக்கள் நன்றியுணர்வுடன் நோக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். சாதகமான நிலைமைகளை இவ்வாறு அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
எனவே இதனை சரியான சந்தர்ப்பமாக எடுத்து தமிழ் தேசியம் சார்ந்த அரசியல்வாதிகள், தமிழ் மக்கள், புத்திஜீவிகள், புலம்பெயர் தேசத்தவர்கள் காய்களை நகர்த்த வேண்டும். "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்று முதுமொழி கூறிய எமது முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Kajinthan அவரால் எழுதப்பட்டு, 28 December, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.