இலங்கைக்கு வழங்கவுள்ள 100 மில்லியன் டொலர் கடன்: அரசு எடுத்த நடவடிக்கை
இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலான புதிய திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக குறித்த நிதி பயன்படுத்தப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
100 மில்லியன் டொலர்
இதனால் குறித்த தரப்பினருக்கு உதவும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த திட்டத்தின் நடைமுறைக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்க வங்கி இணங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் நடவடிக்கை
அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு மானிய வட்டி விகிதத்தில் முதலீடு மற்றும் செயற்பாட்டு மூலதனக் கடன்களை வழங்குவதற்காக அரசாங்கம் சிறு மற்றும் நடுத்தர நிறுவன கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
மேலும், பணப்புழக்க அடிப்படையிலான கடன்களை விட, பிணை அடிப்படையிலான கடன்களுக்கு வங்கிகள் முன்னுரிமை அளிப்பதால், சிறு மற்றும் நடுத்தர தொழில் வணிகர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வாக, தேசிய கடன் பாதுகாப்பு முகாமையை நிறுவ தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.