கையூட்டு வாங்கிய ஏஎஸ்பி மற்றும் பெண் சார்ஜென்ட் கைது!
நுவரெலியா உதவி காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவரும், கல்முனை உதவி காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த பெண் சார்ஜென்ட் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
வெல்லாவெளி காவல்நிலையத்தில் கடமையாற்றும் திருமணமாகாத கான்ஸ்டபிள் ஒருவர், வீட்டிலிருந்து கடமைக்கு சமுகமளிப்பதற்காக மட்டக்களப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான காவல்துறை அத்தியட்சகரின் அனுமதியைப் பெறுவதற்கான பரிந்துரையை வழங்குவதற்கு மேற்படி லஞ்சம் பெறப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
அதன்போது, பல சந்தர்ப்பங்களில் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் 72,000 ரூபா பணத்தை இலஞ்சமாக கோரிப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், நுவரெலியா உதவி காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மேலேயுள்ள விசாரணைக்கு அமைவாக பல சந்தர்ப்பங்களில் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் சம்பந்தப்பட்ட பெண் சார்ஜென்ட்டும் இன்று(05) கல்முனை உதவி காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தினுள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் நுவரெலியா மற்றும் கல்முனை நீதவான் நீதிமன்றங்களில் முற்படுத்தப்படவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |