கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்! ஆறு காவல்துறையினருக்கு விளக்கமறியல்!
புதிய இணைப்பு
கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஆறு காவல்துறை அதிகாரிகளும் நாளை (26.01.2026) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (25.01.2026) கம்பஹா நீதவான் முன்னிலையில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரிந்திவிட்ட வழியாக உடுகம்பொல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை வாகனத்தை நிறுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டபோது இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் நிறுத்த உத்தரவை மீறியதாக அதிகாரிகள் மோட்டார் சைக்கிளைத் துரத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தாக்குதல்
மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் காவல்துறையின் உத்தரவை மதிக்கத் தவறியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் அவரைப் பின்தொடர்ந்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டபோது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாதிரியார் என அடையாளம் காணப்பட்ட 33 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்படி, அவர் காவல்துறை அதிகாரிகள் தன்னைத் தாக்கியதாகக் கூறி முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில், சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக உதவி காவல் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |