தொற்றுநோய் தொடர்பில் அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு..!
மேல் மாகாணத்தில் பன்றிகளுக்கு பரவும் நோய் தொற்று நோயாக வளர்ச்சியடையவில்லை என அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் மனிதர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான போக்கு இல்லை என குறித்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கலாநிதி சிசிர பியசிறி இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டார்.
PRRS நோய்
"இந்த PRRS நோய் 2020 இல் வந்தது. அந்த நேரத்தில் நோய் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் நோய் அவ்வப்போது வெளிப்பட்டது.
இந்த நேரத்தில், PRRS நோய் இலங்கையில் தொற்றுநோயாக மாறவில்லை. அரசாங்க சங்கம் என்ற வகையில் நாங்கள் பொறுப்புடன் கூறுகிறோம்.
எங்களிடம் ஒரு பொறிமுறை இருப்பதால் கால்நடை அலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள் அடுத்து நமது கள அலுவலர்கள், கால்நடை ஆராய்ச்சி அலுவலர்கள், அதன்பிறகு நமது கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் போன்ற நிறுவனங்களில் இருந்து, இந்நோய் பரவுவது குறித்து தொடர்ந்து கண்காணித்து, அக்கறை செலுத்தி வருகிறது.
தவறான பிரசாரம்
இதற்காக விசேட கால்நடை நிபுணர்கள் உள்ளனர். நமது கால்நடைத் துறை, தொற்றுநோய் நிபுணர்கள் உள்ளனர்.
சில நிறுவனங்கள் இதனை உறுதி செய்யாமல், நாட்டுக்கு இதுபோன்ற பிரசாரங்களை செய்வது மிகவும் மோசமானது. இதுபோன்ற தவறான பிரசாரம். இவ்வாறான செயல்கள் கால்நடை தொழிலை பெரிய சரிவுக்கு செல்ல வழிவகுக்கும்." என தெரிவித்தார்.
நாட்டில் உள்ள பன்றி பண்ணைகளை சுற்றி அதிகமான தொற்றுநோய் பரவுவதாக கால்நடை போக்குவரத்து மற்றும் கால்நடை உற்பத்தி விவசாயிகள் சங்கம் நேற்றையதினம் ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
