இலங்கையில் பாரியளவில் அதிகரிக்கும் வறுமை...! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
கடந்த 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் (Srilanka) வறுமை 45 – 52 வீதத்துக்கு இடையே அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, சமூக பாதுகாப்பு வலையமைப்பை மேலும் விரிவாக்க வேண்டும் எனவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
வறுமை பகுப்பாய்வு மையம் (CEPA) வெளியிட்ட புதிய அறிக்கையில் குறித்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அஸ்வெசும நன்மைத் திட்டம்
இதேவேளை, இன்னுமும் 50 வீதமான வீடுகளில் நவீன முறைக்கேற்ப மின்சார தேவைகள் பூரணப்படுத்தப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
அஸ்வெசும நன்மைத் திட்டத்தை பெற்றுக் கொள்ளும் 2,600 குடும்பங்களை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவற்றுள் 4 குடும்பங்கள் மாத்திரம் குறித்த சலுகைத் தொகையை பயன்படுத்தி பணம் ஈட்டும் வழிமுறையை அமைத்துக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்காரணமாக, அஸ்வெசும திட்டத்திற்கு மேலதிகமாக பணம் ஈட்டுவதற்கான ஏதேனும் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் எனவும் வறுமை பகுப்பாய்வு மையம் பரிந்துரைத்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
அஸ்வெசும நலன் திட்டத்தை பெற்றுக் கொள்பவர்கள் குறித்த தொகையை மின்சாரக் கட்டணத்துக்கு 25 வீதமும், உணவுக்காக 16 வீதமும் ஒதுக்குகின்றனர்.
இதன் காரணமாக, வறுமை தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு வறுமை பகுப்பாய்வு மையம் பரிந்துரைத்துள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையில் 2016ஆம் ஆண்டு வறுமையானது 4 வீதம் வரையில் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் அது குறிப்பிட்டளவு அதிகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
