அஸ்வெசும நலன்புரிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 13.9 இலட்சம் குடும்பங்கள்
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாவது புதுப்பிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியலில், 13,91,830 குடும்பங்கள் நலன்புரிக் கொடுப்பனவுகளைப் பெறத் தகுதி பெறவில்லை என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 27ஆம் திகதி வரை தகவல்களைப் புதுப்பித்த 23,83,630 குடும்பங்களில், 9,91,800 குடும்பங்கள் மாதாந்தக் கொடுப்பனவுகளைப் பெறத் தகுதி பெற்றுள்ளன.
இதில், மிக வறிய பிரிவைச் சேர்ந்த 3,63,142 குடும்பங்களுக்கு மாதம் 17,500 ரூபாவும், வறிய பிரிவைச் சேர்ந்த 6,28,658 குடும்பங்களுக்கு மாதம் 10,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளன.
வங்கிக் கணக்கு
தகுதி பெறாதவர்கள் தொடர்பாக மேன்முறையீடுகளையும் பொதுமக்கள் ஆட்சேபனைகளையும் ஒக்டோபர் 29ஆம் திகதி முதல் நவம்பர் 11ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.

இதனை eservices.wbb.gov.lk இணையத்தளம் ஊடாகவோ அல்லது சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்கள் ஊடாகவோ மேற்கொள்ளலாம்.
பொதுமக்கள் தமது ஆட்சேபனைகளைப் பெயர் குறிப்பிடாமலும் சமர்ப்பிக்க முடியும்.
புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நவம்பர் 27ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளதுடன், வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கான கடிதங்கள் நவம்பர் 12ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளன.
மேலும், 7,40,127 குடும்பங்களின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இரண்டாவது புதுப்பிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியல் டிசம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |