செக்கிங் என்ற பெயரில் இந்தியப் படையினர் செய்த கொடுமைகள்
ஈழத்தில் இந்தியப் படையினர் சிறுமிகள், வயது வந்த மூதாட்டிகள் என்று எவரையுமே விட்டு வைக்கவில்லை. பெண் என்ற மானுடப் பிறப்பு முழுவதுமே பாலியல் வல்லுறவிற்கான இயந்திரங்களாகவே அவர்களுடைய கண்களுக்குத் தென்பட்டார்கள்.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய இந்திய இராணுவத்தினர், யாழ்ப்பாணத்தில் மறைந்திருந்த விடுதலைப் புலிகளைத் தேடிக் கண்டு பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.
இது காம வெறி பிடித்தலைந்த இந்தியப் படை ஜவான்களுக்கு நல்ல சந்தர்ப்பமாகவே அமைந்து விட்டது.தேடுதல், ‘செக்கிங் என்ற பெயரில் அவர்கள் மேற்கொண்ட பாலியல் வேட்டைகள் எழுத்தில் எழுத முடியாதவை.
ஆச்சிக்கு நேர்ந்த கொடுமை
1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி நிகழ்ந்த ஒரு கொடுமை இது. யாழ்ப்பாணத்தில் வறிய றோமன் கத்தோலிக்க குடும்பங்கள் வசிக்கும் ஒரு பகுதியில், ஒரு 55 வயது மூதாட்டியையும், 22 வயதுடைய மற்றொரு பெண்ணையும் இரண்டு இந்தியப் படையினர் பாலியல் வல்லுறவு புரிந்த கொடுமை பற்றிய பதிவு இது.
ஒரு கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் இந்தியப் படையினர் முகாம் அமைத்து நிலைகொண்டிருந்தார்கள். அங்கு நடமாடிய அந்த 55 வயது பெண்மணிதான் முதலில் இந்தியப் படையினரின் கண்களில் தென்பட்டிருக்கின்றார்.
அந்தப் பெண்மணி ஏதோ ஒரு வேலையாக வெளியில் சென்றுவிட்டு தனது குடிசைக்குத் திரும்பியபோது, அவளைப் பின்தொடர்ந்து குடிசைக்குள் புகுந்த இந்தியப் படைவீரர்கள் இருவர் தமது வீரத்தை அந்தப் பெண்மணியிடம் காட்டினார்கள். அந்தப் பெண்மணியை, அவரது வயதையும் பொருட்படுத்தாது பாலியல் வல்லுறவு புரிந்தார்கள்.
அந்தப் பெண்மணி கத்த முற்பட்ட போது, அவரது வாயைப் பொத்திப்பிடித்தபடி அந்த அட்டூழியத்தை மேற்கொண்டார்கள். அந்த நேரத்தில் கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்காக வெளியில் சென்ற 22 வயது இளம் பெண் வீடு திரும்பியிருந்தாள்.
வீட்டின் பின்வாசலை அடைந்த அந்தப் பெண் வீட்டில் இருந்து வித்தியாசமான சத்தங்கள் கேட்பதை உணர்ந்து, “ஆச்சி..||, “ஆச்சி..|| என்று அழைத்திருக்கின்றாள். பின் கதவு மெதுவாகத் திறக்கபட்டது. கதவில் இருந்து நீண்ட கரங்கள் அந்தப் பெண்ணையும் உள்ளே இழுத்தது.
அங்கு இருந்த இரண்டு சிப்பாய்களில் ஒருவனால் அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் அவள் தன்னை விடுவித்துக்கொண்டு வெளியில் ஓடிவந்து “காப்பாற்றுங்கள்..|| “காப்பாற்றுங்கள்..|| என்று கத்தினாள். தேம்பித்தேம்பி அழுதாள். வீதியில் அவள் வந்து நின்ற கோலமும், அவளது நிர்கதி நிலையும் அயலில் இருந்தவர்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆத்திரத்துடன் திரண்ட சுமார் 400 இற்கும் மேற்பட்ட மக்கள் கோபாவேசத்துடன் இந்தியப் படை முகாமிற்குள் புக ஆரம்பித்தார்கள். இந்தியப் படையினர் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. பதட்டத்துடன் இருந்த இந்தியப் படைவீரர்கள் தங்கள் துப்பாக்கிகளைச் சுடுவதற்குத் தயாராக வைக்க ஆரம்பித்தார்கள்.
அடையாள அணிவகுப்பு
தமது முகாமை நோக்கித் திரண்டு வந்த மக்கள் கூட்டத்தை சுட்டுத் தள்ளுவதற்கான உத்தரவை வழங்குவதற்குத் தயாரான அந்த முகாமின் கட்டுப்பாட்டு அதிகாரி, திடீரென்று “சுடவேண்டாம் என்ற உத்தரவை தனது ஜவான்களுக்குப் பிறப்பித்தார். திரண்டு வந்த கூட்டத்தின் மத்தியில் ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் வருவதை அவதானித்ததைத் தொடர்ந்தே, அந்த அதிகாரி அப்படியான ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
ஆம், அருகில் இருந்த தேவாலயத்தின் பங்குத் தந்தையான அந்தப் பாதிரியார் தலைமையில்தான் அந்தக் கூட்டம் அங்கு வந்திருந்தது.
சந்தர்ப்பவசமாக அந்த அதிகாரி ஒரு கிறிஸ்தவராக இருந்து விட்டதால், ஒரு பெரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருந்தது. கூட்டத்தை நோக்கித் தனியாகச் சென்ற அந்த அதிகாரி, பாதிரியாரிடம் தன்னை அறிமுகம் செய்துவிட்டு, என்ன விடயம் என்று விசாரித்தார்.
அந்த முகாமைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் மேற்கொண்ட அந்தத் துர்நடத்தை பற்றி பாதிரியார் விளக்கிக் கூறினார். அந்தப் பெண்ணையும் அழைத்து அந்த அதிகாரி முன்னர் நிறுத்தி, அவளுக்கு நேர்ந்த கொடுமைக்காக அந்தப் பாதிரியார் நியாயம் கேட்டார்.
குடிசையில் இருந்த அந்த வயதான பெண்மணியையும் அங்கு அழைத்துப் போனார்கள். அங்கிருந்த இந்தியப் படையினரிடையே ஒரு அடையாள அணிவகுப்பை நடாத்துவதற்கு அந்த அதிகாரி ஏற்பாடு செய்திருந்தார். அடையாள அணிவகுப்பில் அந்தப் பாதகர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டார்கள்.
அவர்களிருவருக்கும் தண்டணை வழங்கப்படும் என்ற அந்த அதிகாரியின் உறுதிமொழியை நம்பி கூட்டம் கலைந்தது. ஆனால் உண்மையிலேயே அந்தப் பாதகர்கள் தண்டிக்கப்பட்டார்களா, அல்லது அது வெறும் கண்துடைப்பா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
வரலாற்றுப் பெண்கள்
ஒரு பதின்மூன்று வயதுப் பெண்ணிற்கு நடந்த கொடுமை மிகவும் கொடூரமானது. ஒரு காலத்தில் அவளது வீடு விடுதலைப் புலிகளின் முகாமாக இருந்தது. இந்தியப் படையினருடன் துணை வந்ததமிழ் குழு உறுப்பினர் இதனை இந்தியப் படையினருக்குத் தெரியப்படுத்தியிருந்தார்கள்.
‘செக்கிங் என்று கூறிக்கொண்டு அந்த வீட்டை முற்றுகையிட்ட இந்தியப் படையினரின் கண்களில் அந்த 13 வயதுச் சிறுமி தென்பட்டுவிட்டாள். வீட்டிலிருந்த மற்றவர்களை மிரட்டிவிட்டு, அந்தச் சிறுமியைத் தனியே அழைத்துச் சென்று அவளைப் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கினார்கள்.
அந்தச் சிறுமியின் கதறல் அருகில் இருந்தவர்களின் காதைச் செவிடாக்கின. பின்னர் அந்தச் சிறுமியின் குடும்பம் முழுவதும் கொழும்பிற்கு இடம்பெயர்ந்துவிட்டன.
இந்தியப் படையினர் தமக்கு இழைத்த கொடுமைகளை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட்டு, தமது அன்றாட வேலைகளைக் கவணிக்க ஆரம்பித்த புத்திசாலித்தனமான எத்தனையோ பெண்கள் இன்னமும் இங்கு இருக்கத்தான் செய்கின்றார்கள்.
தம்மீது தமது விருப்பதையும் மீறி பட்ட கொடிய கரங்களின் அடையாளத்தை ‘தூசிதட்டிவிட்டு, தமது வரலாற்றுக் கடமைகளை மேற்கொள்ள ஆரம்பித்த எத்தனையோ வீரப் பெண்களும் எமது சமூகத்தில் காணப்படவே செய்கின்றார்கள்.
அதேவேளை தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நீதி வேண்டிப் போராடிய வீரப் பெண்கள் பலரது கதைகளும் பரவலாகக் காணப்படவே செய்கின்றன.
அவலங்கள் தொடரும்…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |