யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீடு தாக்குதல் : ஆரம்பமானது கண்டன போராட்டம்
யாழ்ப்பாணத்தில்( Jaffna) ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அவருக்கு விடுக்கப்பட்ட உயிரச்சுறுத்தல் ஆகியவற்றறை கண்டித்து யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 13 ஆம் திகதி அதிகாலை வேளை யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தைமேனியில் அமைந்துள்ள ஊடகவியலாளரின் வீட்டிற்கு மோட்டார்சைக்கிள்களில் சென்ற இனந்தெரியாத நபர்கள் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன் அங்கிருந்த ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிள் மற்றும் அவரது சகோதரனின் ஓட்டோ மீதும் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
வடக்கு ஊடகவியலாளர்கள்
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வடக்கு ஊடகவியலாளர்கள் இன்று (19) காலை யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக கண்டண ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும்
இதன்போது ஊடகவியலாளருக்கு யார் பொறுப்பு, மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் ஏன் முடிச்சு,உண்மைய மறைக்க சம்பவத்தை திசை திருப்பாதே உட்பட பல சுலோக அட்டைகளை ஊடகவியலாளர்கள் தாங்கியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |