புதுக்குடியிருப்பில் இராணுவ புலனாய்வாளர்கள் தாக்குதல்! ஒருவர் படுகாயம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று(24) அதிகாலை 3.00 மணியவில் இராணுவ புலனாய்வாளர்கள் வீதியால் சென்ற டிப்பரை வழிமறித்து சாரதிமீது தாக்குதல் நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் தெரிவிக்கையில்,
இன்று அதிகாலையில் டிப்பரில் புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் பயணித்த வேளை, டிப்பரினை இடைமறித்த சிவில் உடை தரித்த இராணுவ புலனாய்வாளர்கள் என் மீது இரும்புக் கம்பியினால் தாக்கினர்.
குறித்த புலனாய்வாளர்கள் டிப்பரில் என்ன இருக்கின்றது என்று கேட்டார்கள். நான் டிப்பரில் ஒன்றும் இல்லை என்றேன். எனினும் மதுபோதையில் நின்ற அவர்கள் என்மீது கம்பியால் தாக்கினர்” என்றார்.
இந்த நிலையில், கண் மற்றும் முதுகுப் பகுதிகளில் காயமடைந்த டிப்பர் சாரதியான, கைவேலி பகுதியினைச் சேர்ந்த 41 அகவையுடைய நவரத்தினம் உதயசீலன் என்ற குடும்பஸ்தர் தற்போது புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
