யாழில் 4 வயது சிறுமி மீது ஆசிரியை தாக்குதல் - உடலில் காயங்கள்: அதிர்ச்சி சம்பவம்
யாழ்ப்பாணத்தில் நான்கு வயது சிறுமி ஒருவரைத் தனியார் முன்பள்ளி ஆசிரியர் கடுமையாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் சுன்னாகம் பகுதியில் இயங்கி வரும் தனியார் முன்பள்ளி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த ஆசிரியை நான்கு வயது சிறுமியைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உடலில் காயங்கள்
இந்தத் தாக்குதலில் சிறுமியின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் சிறுமி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியை நேற்று முன்தினம் சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |