யாழ். மத்திய பேருந்து நிலையக் காணியை மீட்க சட்ட நடவடிக்கை!
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ள காணி உரிமம் தொடர்பில் வழக்கு தொடர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் (11-11-2026) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நகரின் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ள குறித்த காணி அரச காணியாக இருப்பதுடன் அங்கு அனுமதியின்றிக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காணியின் உரிமம்
அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுவதற்கான அதிகாரம் மாநகர சபைக்கு இருப்பதால் அதனைப் பயன்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் குறித்த கடைகள் வாழ்வாதாரத் தேவைக்காக அமைக்கப்பட்டவை அல்ல என்றும் அவற்றின் பயன்பாடு தொடர்பில் கவலைகள் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பேருந்து நிலையத்தைச் சூழவுள்ள அனுமதியற்ற கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க மாநகர சபை ஆணையாளர் இணக்கம் தெரிவித்தார்.

காணியின் உரிமம் மற்றும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் உரிய வழக்குத் தாக்கல் செய்வதற்கு யாழ்ப்பாணப் பிரதேச செயலரும் இணக்கம் வெளியிட்டார்.
அதேவேளை யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர பேருந்து சேவைகளை முன்னெடுக்குமாறு இலங்கை போக்குவரத்து சபையினரிடம் கோரிய போது தமக்கு என ஒரு பேருந்து நிலையம் இருக்கும் போது நாம் வேறு எங்கிருந்தும் சேவைகளை ஆரம்பிக்க மாட்டோம் என கூறி கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து சேவையை ஆரம்பிக்காது உள்ளனர்.
இந்நிலையிலையே போக்குவரத்து சபையினர் தமக்கு சொந்தமான பேருந்து நிலையம் என கூறி வரும் பேருந்து நிலையம் அமைந்துள்ள காணி அரச காணி என்றும் அதனை மீள பெற பிரதேச செயலகம் சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |