A9 வீதி விபத்துக்கு SLTB பேருந்தின் சாரதியே காரணம்: காவல்துறை அறிக்கை
ரம்பேவ மற்றும் வேலியூ சந்திப்புகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மூன்று பேருந்துகள் நேருக்கு நேர் மோதி இன்று ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நோக்கித் தனது சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுடன், முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான கபிதிகொல்லேவ டிப்போ பேருந்து நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்த சமயத்தில் அப்பகுதியில் பலத்த மழை பெய்துகொண்டிருந்ததுடன், வீதியும் வழுக்கும் தன்மையுடன் காணப்பட்டுள்ளது.
சாரதியின் அலட்சியம்
இத்தகைய ஆபத்தான சூழ்நிலையிலும், வளைவு ஒன்றுக்கு மிக அருகில் வைத்து முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தை SLTB பேருந்தின் ஓட்டுநர் மிகவும் அலட்சியமான முறையில் முந்திச்செல்ல (Overtake) முயன்றதே இந்த கொடூர விபத்துக்குக் காரணம் என்று டி.ஐ.ஜி. டபிள்யூ.பி.ஜே. சேனாதீர (இலங்கை பொலிஸ் சேவையின் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்) தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் SLTB பேருந்தின் ஓட்டுநர், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு பயணி உட்பட ஐவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், காயமடைந்த 60க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்து குறித்து மிகிந்தலை காவல்துறையினர் மற்றும் அனுராதபுரம் சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |