ஒரே நேரத்தில் நடத்தப்படவுள்ள மாகாணசபை தேர்தல்! நிலைப்பாட்டை அறிவித்த அரசாங்கம்
இலங்கையில் மாகாண சபை தேர்தல்களை அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே நேரத்தில் நடத்த அரசாங்கம் விரும்புகிறது என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணம் என கட்டம் கட்டமாக நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து இந்த ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
தேர்தல் முறைமை சார்ந்த ஒழுங்கு
இது குறித்து பதில் வழங்கிய அவர், தேர்தல்களை கட்டம் கட்டமாக நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை.

ஒரே நேரத்தில் அனைத்து மாகாணங்களுக்கும் தேர்தலை நடத்தவே அரசாங்கம் விரும்புகிறது. ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதில் தற்போது நிலவி வரும் முக்கிய தடை என்னவென்றால், தேர்தல் சட்டத்தில் உள்ள சில தொழில்நுட்ப சிக்கல்களே ஆகும்.
நாடாளுமன்றத்தின் மூலம் தேர்தல் முறைமை சரியாக ஒழுங்கமைக்கப்பட்டு, சட்ட வடிவம் கொடுக்கப்பட்டால், அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கெடுப்பை நடத்த முடியும்
இதற்கான சட்ட ரீதியான மற்றும் தேர்தல் முறைமை சார்ந்த ஒழுங்குமுறைகளை நாடாளுமன்றத்தில் மேற்கொள்வதற்கும், நாடாளுமன்றத்தினால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தேர்தல் முறைமைகளுக்கு இணங்க தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த இறுதி முடிவை எடுப்பதற்கும் அரசாங்கம் தற்போது மிக விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |