சீமெந்து மூட்டையின் விலை அதிகரிக்கப்படவில்லை: அரசாங்க தரப்பு சுட்டிக்காட்டு
சந்தையில் சீமெந்து மூட்டையின் விலை எவ்வகையிலும் உயர்த்தப்படவில்லை என வர்த்தக, வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சீமெந்து விலை அதிகரித்துள்ளதாக பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் சீமெந்து மூட்டையின் உத்தியோகபூர்வ சில்லறை விலை 2,400 ரூபாயாகக் குறிக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடிகள் காரணமாக அது 1,700 ரூபாய் முதல் 2,100 ரூபாய் வரையான விலையிலேயே நுகர்வோருக்குத் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.
போலி வதந்திகளை நம்ப வேண்டாம்
விற்பனை முகவர்களுக்கான கமிஷன் தொகையில் ஏதேனும் குறைப்பு ஏற்பட்டிருந்தால், அது முகவர்களுக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடைப்பட்ட உள்நாட்டுப் பிரச்சினையாகும்.

அதனை நிறுவனங்களுடன் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, நுகர்வோர் மீது சுமத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீமெந்தின் விலையை அதிகரிப்பது தொடர்பாக எவ்வித கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை எனவும், பொதுமக்கள் இத்தகைய போலி வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் வசந்த சமரசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |