மதத்தலங்களை வைத்து இனவாதத்தை தூண்ட முயற்சி : யாழில் அநுர பகிரங்கம்
தொல்பொருள் விடயத்தை முன்வைத்து அல்லது ஒரு மத ஸ்தலத்தை காரணம் காட்டி நாட்டில் இனவாத முரண்பாடுகளை தூண்டிவிடப் பார்க்கிறார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரியில் நேற்று (16) நடைபெற்ற, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,500 வீடுகளை நிர்மாணித்தல் உட்பட நாடு முழுவதும் 31,218 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் “தமெக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' தேசிய வீட்டுத் திட்டம் 2026” அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகோண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த பிரதேச மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எமது அரசாங்கத்தை உருவாக்க பங்களித்தார்கள். ஆட்சியில் இருக்கும் தரப்பினருக்கு எதிரான மற்றும் உடன்பாடற்ற நிலைப்பாடே நீண்டகாலமாக இங்கு காணப்பட்டது.
தொல்பொருள் நினைவுச்சின்னங்கள்
அதில் தவறில்லை. அரசாங்கம் இனவாதத்தை போசிப்பதாகவோ மக்களின் சொத்துக்களை திருடுவதாகவோ பொதுமக்கள் குறித்து சிந்திக்காமல் இருந்தாலோ அல்லது அரசாங்கம் தம்மைப் பற்றி மாத்திரமே சிந்திப்பதாக இருக்குமாயின் அரசாங்கமும் மக்களும் தூரமாவதை தடுக்க முடியாது.

இன்றும் கூட, சிலர் தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் அல்லது மதத் தளங்களை மையமாகக் கொண்டு, ஆங்காங்கே இன மோதல்களைத் தூண்ட முயற்சிக்கின்றனர்.
அவர்கள் முயற்சித்தாலும், வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது வேறு எந்த இடத்திலும் இனவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது.
ஒற்றுமையுடனும் வாழும் நாடு
மீண்டும் எமது நாட்டில் வடக்கிலோ, தெற்கிலோ, கிழக்கிலோ நாட்டின் எப்பகுதியிலும் சிங்களவரோ தமிழரோ முஸ்லிமோ எந்த ஒரு இனவாதத்திற்கும் இடமளிக்க மாட்டோம் என உங்களுக்கு ஒரு உத்தரவாதத்தை தருகிறேன்.

நாம் அனைவரும் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் வாழும் நாடு தேவை. அதேபோன்று, சிறப்பான பொருளாதார நிலையுள்ள பொழுதுபோக்குள்ள மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை எமக்கு அவசியம்.“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |