வழமைக்குத் திரும்பியுள்ள எரிபொருள் விநியோகம்...! வெளியான அறிவிப்பு
நாட்டின் எரிபொருள் விநியோகம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே.ஏ.எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (03-02-2026) ஊடகங்களுக்கு வெளியிட்ட ஒலிப்பதிவிலேயே அவர் இந்த விபரங்களை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனடிப்படையில், அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று (02-02-2026) ஒரு கோடி 3,28,000 லீற்றர் டீசல் மற்றும் ஒரு கோடி 17,02,000 லீற்றர் 92 ரக பெற்றோல் உட்பட பெருமளவிலான எரிபொருள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
நியோக நடவடிக்கைகள்
அத்துடன், இன்று (03-02-2026) அதிகாலை 6:00 மணி முதல் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், காலை 8:00 மணி வரையிலான இரண்டு மணிநேர காலப்பகுதிக்குள் மட்டும் சுமார் 4,15,740 லீற்றர் டீசல் மற்றும் 4,81,800 லீற்றர் 92 ரக பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் புள்ளிவிபரங்களை முன்வைத்தார்.
மேலதிக விபரங்கள்
இந்தநிலையில், நேற்று மற்றும் இன்று காலை வரை விநியோகிக்கப்பட்ட மேலதிக விபரங்கள் வருமாறு:
| எரிபொருள் வகை | நேற்று (02-02-2026) விநியோகம் | இன்று (03-02-2026) காலை (8:00 மணி வரை) |
| டீசல் | 1,03,28,000 லீற்றர் | 4,15,740 லீற்றர் |
| 92 ரக பெற்றோல் | 1,17,02,000 லீற்றர் | 4,81,800 லீற்றர் |
| 95 ரக பெற்றோல் | 8,48,000 லீற்றர் | 39,600 லீற்றர் |
| சுப்பர் டீசல் | 3,43,000 லீற்றர் | 19,800 லீற்றர் |
| மண்ணெண்ணெய் | 5,68,000 லீற்றர் | - |
எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற்று வருவதால் இன்று மதியத்திற்குள் எரிபொருள் நிலையங்களில் வரிசைகள் இல்லாத நிலை உருவாகும் என்றும், எனவே பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளாமல் வழமை போல நுகர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், எரிபொருளை வீடுகளில் சேமித்து வைக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |