சிறிலங்காவில் நாளை அரச எதிர்ப்புப் போராட்டத்தை பலவீனமாக்க முயற்சி
அரச எதிர்ப்புப் போராட்டம்
சிறிலங்கா அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், பொதுமக்கள் மீதான பொருளாதார சுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் நாளைய தினம் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அனைத்து எதிர்க்கட்சிகளின் தீவிர பங்கேற்புடன் நாளை மாலை 3 மணிக்கு கொழும்பு எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகாமையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட 15 இற்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 150 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், குடிசார் அமைப்புகள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போராட்டத்தை மீளெடுக்க கோரிக்கை
அரசாங்கத்திற்கு எதிராக நாளைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தை கைவிடுமாறு வணிக சபைகள் சில கேட்டுக்கொண்டுள்ளன.
சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க எடுக்கப்படும் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டாம் என குறித்த வணிக சபைகள் அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளன.
நவம்பர் 02 ஆம் திகதியான நாளை புதன்கிழமை பாரிய போராட்டங்களுக்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இலங்கை வர்த்தக சம்மேளனம், இலங்கை இளம் தொழில்முனைவோர் சங்கம், தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட 06 வணிக சபைகள் கூட்டறிக்கை ஊடாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.
போராட்டக்காரர்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை அங்கீகரிக்கும் அதே வேளை, சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க எடுக்கப்படும் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய இந்த வகையான எதிர்ப்புகளை கைவிடுமாறு அனைத்து தரப்பினரையும் குறித்த சபைகள் கேட்டுக் கொண்டுள்ளன.
பொருளாதார மீள எழுச்சி
இந்த நேரத்தில் நடைபெறும் எந்த ஒரு ஸ்திரமற்ற செயலும், அதனால் ஏற்படும் எதிர்மறையான விளம்பரங்களும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் உட்பட பொருளாதார மீள எழுச்சிக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை கடுமையாக பாதிக்கும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் அரசாங்கத்துக்கு எதிரான காலிமுகத்திடல் போராட்டத்துக்குப் பின்னர் நடைபெறும் மிகப்பெரிய போராட்டம் இதுவாக அமையும் என அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
