கெஹெல்பத்தரவை இலக்குவைத்து சிறைக்குள் இருமுறை சயனைட் மூலம் கொலை முயற்சி
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மந்தினு பத்மசிறி பெரேரா எனப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ நீதிமன்றில் அதிர்ச்சி கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
இரண்டு சந்தர்ப்பங்களில் எனக்கு சயனைட் கொடுத்து கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வெலிசர சிறைச்சாலையில் போதிய பாதுகாப்பு இல்லை. எனக்கு மரண அச்சுறுத்தல்கள் உள்ளன. எனக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என அவர் நீதிமன்றில் கூறியள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் நேற்று (28) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
வழக்கு விசாரணை
பாதாள உலகக் குழுத் தலைவர்களான கம்பஹா பபா மற்றும் பபீ ஆகியோரை சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வெலிசர சிறைச்சாலையில் இருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக சந்தேகநபர் நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னிலைப்படுத்தப்பட்டார். தமக்கு எதிராக மரண அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும், சிறைச்சாலையில் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும் சந்தேகநபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவரது கோரிக்கையைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, சந்தேகநபரை எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |