கணக்காய்வாளர் நாயகம் நியமனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக மற்றுமொரு புதிய பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) விரைவில் பரிந்துரைக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
குறித்த பதவிக்காக ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை அரசியலமைப்பு பேரவை (Constitutional Council) தொடர்ச்சியாக நிராகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி ஆனந்த விஜேபால (Ananda Wijepala) ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், "நாட்டுக்கு ஒரு கணக்காய்வாளர் நாயகம் அவசியம் என்பதை ஜனாதிபதி அறிந்துள்ளார்.
தேசிய கணக்காய்வு அலுவலகம்
முன்னைய பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியான வேறொருவரின் பெயர் வரும் நாட்களில் முன்வைக்கப்படும்" என குறிப்பிட்டார்.

தேசிய கணக்காய்வு அலுவலகம் கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி முதல் கணக்காய்வாளர் நாயகம் அல்லது பதில் கணக்காய்வாளர் நாயகம் இன்றி இயங்கி வருகின்றது.
இதற்கு முன்னர் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட எச்.டி.பி. சந்தன, எல்.எஸ்.ஐ. ஜயரத்ன மற்றும் இராணுவத்தின் உள்வாரி கணக்காய்வு பணிப்பாளர் ஓ.ஆர். ராஜசிங்க ஆகியோரின் பெயர்கள் அரசியலமைப்பு சபையினால் நிராகரிக்கப்பட்டன.
இறுதியாக ஓ.ஆர். ராஜசிங்கவின் பெயர் பரிசீலனைக்கு வந்தபோது, அதற்கு ஆதரவாக 4 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இந்தநிலையில் ஜனாதிபதியின் பரிந்துரைகள் காரணமின்றி நிராகரிக்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |