ரஷ்ய பிடியில் சிக்கிய அவுஸ்திரேலியர்: வெளியான காணொளியால் பரபரப்பு
உக்ரைன் போரின் போது ரஷ்ய இராணுவத்தினரால் அவுஸ்திரேலியாவை சேர்ந்த நபர் என கூறப்படும் ஒருவர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக காணொளியோன்று வெளியாகியுள்ளது.
இதன்படி, தனது நாட்டவர்களில் ஒருவரைக் காட்டும் காணொளியின் நம்பகத்தன்மையை சரிபார்க்க அவுஸ்திரேலிய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
தாக்குதல்
ரஷ்ய டெலிகிராம் கணக்குகளில் வெளியிடப்பட்ட குறித்த காணொளி, சேறும் சகதியுமான முகம் கொண்ட ஒரு நபரிடம் ரஷ்ய மொழி பேசும் மற்றொரு நபர் கேள்வி கேட்பதைக் காட்டுகிறது.
அத்தோடு, அவர் தலையில் இரண்டு முறை தாக்குவது போலவும் காட்டப்படுகிறது.
கைகள் நாடாவால் இறுக்கமாக கட்டப்பட்டிருப்பது போல் தோன்றும் அந்தநபர், கமராவில் தன்னை 32 வயதான ஆஸ்கார் ஜென்கின்ஸ் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, அவுஸ்திரேலியா மற்றும் உக்ரைனில் வசிப்பதாகக் கூறுகிறார்.
பிரதமரின் அறிவிப்பு
இந்த நிலையில், குறித்த நபர் தொடர்பில் மொஸ்கோவில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகம் மூலம் ஆராய்ந்து வருவதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அந்த நபருக்கு ஆதரவை வழங்க வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை (DFAT) மூலம் பணியாற்றி வருவதாகவும், அங்குள்ள விவரங்களையும் உண்மைகளையும் கண்டறிய முயற்சித்து வருவகின்றதாகவும் பிரதமர் அல்பானீஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்.. |