மெகா ஊழல் வழக்குகளில் சர்வதேச பாணி அரசியல் மரண தொடர்...
ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோவின் திடீர் மரணம் மற்றும் தேசிய மட்டத்திலான மாபெரும் ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய பிரமுகர்களின் தொடர் மறைவுகள் புதிய அதிர்ச்சி அலைகள் கிளம்பியுள்ளன.
இலங்கையின் அரச கட்டமைப்புக்குள்ளேயே இயங்கும் ஒரு சக்திவாய்ந்த மறைமுகப் பேரழிவுக் கரங்களின் செயல்பாட்டை வெளிச்சம்போட்டுக் இவை காட்டியுள்ளதாக சமூக ஊடகங்களில் கேள்விகள் புதுமுகமாக கிளம்பியுள்ளன.
முன்னாள் சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் போன்றே, எராஜின் மரணமும் ஒரே மாதிரியான இருண்ட பின்னணியைக் கொண்டிருப்பதாக அச்சமூக ஊடகச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
1. அரசியல் பின்னணியும் - விளையாட்டுத் துப்பாக்கி" சர்ச்சையும்
எராஜ் பெர்னாண்டோ வெறும் ஒரு பிரதேச அரசியல்வாதி மட்டுமல்லாது, ஹம்பாந்தோட்டையின் பாரம்பரிய அரசியல் குடும்பப் பின்னணியைக் கொண்டவர் ஆவார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட சட்டத்தரணியான டென்சன் எதிரிசூரியவின் மருமகனான இவர், தென் கொரியாவில் பணிபுரிந்து ஈட்டிய பணத்துடன் இலங்கை அரசியல் களத்தில் இறங்கி, ஆரம்பத்தில் ராஜபக்சர்க்களின் அரசியல் வளர்ச்சிக்கு பெரும் ஆதரவை வழங்கியிருந்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையத்தைப் பார்வையிட வந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை, எராஜ் பெர்னாண்டோ துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
பின்னர் அது ஒரு விளையாட்டுத் துப்பாக்கி என அவர் தரப்பில் கூறப்பட்ட போதிலும், நாமல் ராஜபக்ச உள்ளிட்டோரின் அரசியல் தேவைகளை நிறைவேற்றும் ஒரு கருவியாக அவர் செயல்பட்டதாக அப்போது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
எனினும், பிற்காலத்தில் ராஜபக்சர்க்களால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை உணர்ந்துகொண்ட எராஜ் பெர்னாண்டோ, அவர்களிடமிருந்து விலகி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பெலியத்த தேர்தல் தொகுதியின் அமைப்பாளராகப் பொறுப்பேற்றார்.
அதன்பின் அவர் ராஜபக்சர்களின் அரசியலைத் தீவிரமாக விமரிசித்து வந்தார்.
2 பில்லியன் டாலர் ஏயார்பஸ் ஊழலும் தொடர் மரணங்களும்
இலங்கையை உலுக்கிய ஸ்ரீலங்கன் விமானச் சேவையின் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏயார்பஸ் கொள்வனவு மற்றும் அதனுடன் தொடர்புடைய லஞ்ச ஊழல் விவகாரங்களின் சாட்சிகளை அழிப்பதற்காகவே இந்த மாபெரும் சதி வலைப்பின்னல் இயங்குவதாகக் கூறப்படுகிறது.
பிரித்தானியாவின் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் மூலம் வெளிப்படுத்தப்பட்ட இந்த ஊழல் வழக்கில், 12 கோடி ரூபாய் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பின்னணியில், மிகக் குறுகிய காலத்திற்குள் முக்கிய சாட்சிகள் மர்மமான முறையில் மரணமடைந்திருந்தனர்.
இந்த மெகா ஊழல் மோசடியை முதன்முதலில் ஊடக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ரஜீவ் ஜயவீர மரணம் பாரிய சதியின் பின்னணியாக பார்க்கப்படுகிறது.
மேலும், இலஞ்சப் பணம் கைமாறியதாகக் கூறப்படும் 'எஸ்.எல். அக்ரோ' நிறுவனத்தின் உரிமையாளரான 27 வயது யோஹான் அபேநாயக்க, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகி வாதிட்ட சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதளிஜே மற்றும் ஸ்ரீலங்கன் விமானச் சேவையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன ஆகிய நால்வரும் அடுத்தடுத்து மரணமடைந்தமை வெறும் தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
3.இரசாயன விஷத்திற்கு மாறியுள்ள புதிய தந்திரங்கள்
கடந்த காலங்களைப் போல துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்லும் வழக்கமான கொலைக் கலாசாரத்தில் இருந்து விலகி, தற்போது உலக அளவில் பயன்படுத்தப்படும் அதிநவீன மற்றும் நுட்பமான முறைகள் இலங்கையிலும் ஊடுருவியுள்ளதாக அச்சமூக ஊடகச் செய்திகள் கவலை தெரிவிக்கின்றன.
பொலோனியம் போன்ற ஆபத்தான கதிரியக்க இரசாயனப் பொருட்கள் அல்லது உடற்கூற்றுப் பரிசோதனைகளின் போது மிகச் சாதாரணமாக மாரடைப்பு அல்லது கொரோனா போன்ற இயற்கையான மரணங்களாகக் காட்டக்கூடிய நுட்பமான விஷப் பிரயோகங்கள் மூலம் இத்தகைய அரசியல் படுகொலைகள் அரங்கேற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் வலுவாக எழுந்துள்ளன.
மேலும், 'ஹரக் கட்டா' போன்ற ஆபத்தான பாதாள உலகத் தலைவர்களின் தடுப்புக்காவல் உத்தரவுகளை நீக்குவதற்கு எதிராகச் சட்டமா அதிபர் திணைக்களம் செயல்படும் விதம் மற்றும் முக்கிய அரசியல் புள்ளிகளைப் பாதுகாப்பதற்காகப் பின்னணியில் அரங்கேறும் அரசியல் டீல்கள் போன்ற குற்றச்சாட்டுகள், இலங்கையில் சட்டத்தின் ஆட்சியைத் புறந்தள்ளிவிட்டு இன்னமும் நிழல் அரசாங்கத்தின் இயந்திரம் எவ்வளவு பலமாகச் செயல்படுகிறது என்பதை நிரூபிப்பதாக விவாதங்கள் எழுந்துள்ளன.
4.மரணத்தில் நீடிக்கும் அடுக்கடுக்கான சந்தேகங்கள்
பம்பலப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் மரணம் உயிர்மாய்ப்பாக காட்டப்பட்டாலும், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நிகழ்வுகள் இது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலையா என்ற பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளன.
அவர் மரணமடைவதற்கு முந்தைய இரவு, தமக்குத் தெரியாத சிலர் தன்னைச் சந்திக்க வந்திருப்பதாக எராஜ் தனது நண்பரான தொழிலதிபருக்குத் தொலைபேசியில் கூறியுள்ளதோடு, அவர் சடலமாக மீட்கப்பட்ட பகுதியில் இருந்த சிசிரிவி கேமராக்கள் மர்மமான முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
மரணமடைவதற்கு மிக நெருங்கிய நேரம் வரை அவர் சமூக ஊடகங்களில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்ததும், அவர் தூக்கில் தொங்கியதாகக் கூறப்பட்டாலும் உடற்கூற்றுப் பரிசோதனையில் அவரது கழுத்து எலும்புகளுக்கோ அல்லது தொண்டைப் பகுதிக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதும் சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளன.
தேசிய மட்டத்திலான மாபெரும் ஊழல்கள், அரசியல் வழக்குகள் மற்றும் நிழல் அரசாங்கத்தின் இரகசியங்களை அறிந்த சாட்சிகள் அடுத்தடுத்து அழிக்கப்பட்டு வரும் இந்த இருண்ட பின்னணியில், இந்தத் தொடர்ச்சியான மர்ம மரணங்களின் பின்னணி குறித்து சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற புலனாய்வு விசாரணை ஒன்று உடனடியாக நடத்தப்படாவிட்டால், இலங்கையின் அரசியல் அதிகாரப் போராட்டத்தின் இருண்ட பக்கங்களில் மறைக்கப்பட்டுள்ள உண்மைகள் என்றென்றைக்குமாக புதைக்கப்பட்டுவிடும் என அச்சமூக ஊடகச் செய்திகள் எச்சரிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து காவல்துறை பல கோணங்களில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |