டேன் பிரியசாத் படுகொலை: பிரதான சந்தேகநபரின் பரபரப்பு வாக்குமூலம்!!
டேன் பிரயசாத் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான துலான் மதுஷங்க பல முக்கிய வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, டேன் பிரயசாத்தின் சகோதரரை கொலை செய்ததாகக் கூறப்படும் தரப்பினர் சமீபத்தில் வெல்லம்பிட்டி பகுதியில் நடைபெற்ற ஒரு புத்தாண்டு விழாவின் போது அவரை மிரட்டியதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தின் படி, கடந்த 20 ஆம் திகதி டேன் பிரியசாத்திற்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கொலைக்கான காரணம்
நடத்தப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இதுவே பெரும்பாலும் காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அன்றைய தினம் டேன் பிரியசாத் ஒரு முச்சக்கர வண்டியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளதுடன், அந்த முச்சக்கர வண்டி டேனின் சகோதரனைக் கொலை செய்த சந்தேக நபர்களுடையது என்பதும் தெரியவந்துள்ளது.
தற்போதைய விசாரணைகளின்படி, சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள துலான், தாக்குதலுக்குப் பிறகு டேன் பிரியசாத்தை கொல்ல திட்டமிட்டிருந்ததாக புலப்பட்டுள்ளது.
தற்போது துபாயில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான கொலொன்னாவே தனுஷ்கவிடம் தாக்குதல் குறித்து அவர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபாணி இம்ரானுக்கு தகவல்
பின்னர் அவர் இந்த விடயம் தொடர்பில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான காஞ்சிபாணி இம்ரானுக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
முச்சக்கர வண்டி மீதான தாக்குதல் தொடர்பாக கிடைத்த முறைப்பாடை தொடர்ந்து, டேன் பிரியசாத்துக்கு 20 ஆம் திகதி முன்னிலையாகுமாறு காவல்துறையினர் அழைப்பாணை விடுத்துள்ளனர்.
இருப்பினும், அன்று அவர் காவல் நிலையத்தில் முன்னிலையாகவில்லை, சந்தேக நபர் அந்த நேரத்தில் டேன் பிரியசாத்தை கொல்ல திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்துடன், அன்றைய தினம் டேன் பிரியசாத் இல்லாததால், அவரது மனைவியின் வீட்டிற்குச் சென்று அவரைக் கொல்லத் திட்டமிட்டதாகவும் சந்தேக நபர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
பயணத் தடை விதிக்கப்பட்ட இருவர்
டேன் பிரியசாத்தின் கொலை தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் தற்போது காவல்துறையின் காவலில் உள்ளனர்.
அந்தக் குழுவில் டேன் பிரியசாத்தின் மனைவியின் சகோதரியும் இருந்ததாக காவல்துறயைினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள தந்தை மற்றும் மகன் இருவருக்கும் தொடர்பு இருப்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் தற்போது அந்தப் பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
