இருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு -இந்தியாவின் மயக்க மருந்திற்கு விதிக்கப்பட்டது தடை
நோயாளர்களை மயக்கமடையச் செய்வதற்காக பயன்படுத்தப்படுகின்ற இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Bupivacaine என்ற மருந்தை பயன்பாட்டில் இருந்து நீக்கியதாக ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை நேற்று(19) அறிவித்துள்ளது.
இந்த மருந்து பயன்படுத்தப்பட்டதை அடுத்து 2 நோயாளர்கள் உயிரிழந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பாடசாலை பெண் அதிபர் மரணம்
கண்டி – மாவுஸ்ஸாவ கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபரான கருணாவதி என்பவர் ஹேர்னியா நோய் காரணமாக கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சைக்காக அவர் அதற்கு முதல் நாளில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
2 நாட்களில் வீடு திரும்பும் எதிர்பார்ப்புடன் அறுவை சிகிச்சையை எதிர்கொண்ட அவர், தொடர்ந்தும் வைத்தியசாலையின் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தார். மயக்க மருந்து செலுத்தப்பட்டதன் பின்னர் அவர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் அர்ஜுன திலக்கரத்ன தெரிவித்தார்.
கர்ப்பிணிப் பெண் மரணம்
2 மாதங்களுக்கு முன்னர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து செலுத்தப்பட்டதன் பின்னர் உயிரிழந்தாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் உறுதிப்படுத்தினார்.
ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் அனுமதியுடனேயே இந்த மருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தொழில் வல்லுநர்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.
