சீரற்ற காலநிலையால் இடிபாடுகளுக்குள் சிக்கி நபர் பலி!
பண்டாரவளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட காஹகல்ல அம்பரவ பகுதியில் நேற்று பெய்த கடும் மழையினால் மண்மேட்டுடன் கூடிய கொங்கிறீட் கட்டிடம் வீட்டின் மீது சரிந்து விழுந்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 73 வயதுடைய டபிள்யூ.எம். ஜெயசேகர என அடையாளம் காணப்பட்டுள்ளார். வீட்டின் அறையில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர் சிகிச்சையில் மனைவி
எனினும் குறித்த நபரின் மனைவி தெய்வாதீனமாக காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் தியத்தலாவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
காயங்களுடன் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
சீரற்ற காலநிலை
தற்போது மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளாக தெரிவித்த பண்டாரவளை காவல்துறையினர், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீரற்ற காலநிலை நிலவுவதனால் மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.






