முடிவை அறிவித்தது வங்கதேசம்! ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து விலகல்
எதிர்வரும் ICC T20 உலகக்கிண்ணத் தொடரைப் புறக்கணிப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) முடிவாக அறிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களைக் கருத்திற்கொண்டு இந்தியாவில் விளையாட முடியாது என்பதில் பங்களாதேஷ் பிடிவாதமாக இருப்பதால், இந்த முடிவை எடுத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷின் அரசாங்கத்துடன் கலந்துரையாடி இதற்கான முடிவை எடுக்கவிருப்பதாக நேற்று பிசிபி சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம்(ஐசிசி) மேலும் கால அவகாசம் கேட்டிருந்தது.
ஐசிசியின் நிராகரிப்பு
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக பங்களாதேஷ் அணியின் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஐசிசி நிராகரித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பங்களாதேஷ் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் மற்றும் உயர்மட்ட வீரர்கள் பங்கேற்ற கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தமது வீரர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லை என்பதால், அங்கு சென்று விளையாடப் போவதில்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மாற்று அணி தீர்மானம்
எவ்வாறாயினும், இந்தியாவில் வீரர்களுக்கு எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை எனக் கூறி, போட்டிகளை இடமாற்றம் செய்யும் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தும் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், ஒரு வீரருக்கே பாதுகாப்பு வழங்க முடியாத நாட்டில் முழு அணிக்கும் எப்படி பாதுகாப்பு கிடைக்கும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், பங்களாதேஷ் தொடரிலிருந்து விலகும் பட்சத்தில், அந்த இடத்திற்கு ஸ்கொட்லாந்து அணியை ஐசிசி களமிறக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு பதில் அளித்துள்ள பிசிபி தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல், தங்களைப் போன்ற கிரிக்கெட் பிரியர்கள் அதிகம் உள்ள நாடு தொடரிலிருந்து விலகினால் அது நடத்துநர்களுக்குத்தான் தோல்வி என்றும் ஐசிசி இது குறித்து மீண்டும் பரிசீலிக்கும் என எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |