தேர்தல்களைப் பிற்போடும் முயற்சிக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
சிறிலங்காவில் நாடாளுமன்ற, அதிபர் தேர்தல்களை பிற்போடுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றால் அதனை சிறிதளவும் சகித்துக்கொள்ளப்போவதில்லை, அதனை எதிர்க்கவும் தயங்கப்போவதில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (Bar Association of Sri Lanka) தெரிவித்துள்ளது.
தேர்தல்களைப் பிற்போடுவது சர்வஜன வாக்குரிமை குறித்த மக்களின் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ள அந்த சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரட்ண (Kaushalya Navaratne) மக்களின் வாக்குரிமைக்கு சவால் விடுக்கின்ற விடயமாகவும் இது மாறும் என தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல் நாடாளுமன்ற தேர்தல்களில் எது முதலில் இடம்பெறவேண்டும் என தெரிவிக்கும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் இந்த தேர்தல்கள் இடம்பெறவேண்டும் என்றே சட்டம் தெரிவிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அதிபர்
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபருக்கு பதில் தற்போதைய அதிபர் ஆட்சி புரிகின்றார் என்றாலும் தற்போதைய அதிபரின் பதவிக் காலம் இந்த நவம்பருடன் முடிவிற்கு வருகின்றது எனவும் அதற்கு முன்னர் தேர்தல் இடம்பெறவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைந்ததும் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் நாடாளுமன்றத்தை அதற்கு முன்னர் கலைக்க முடியுமென்றால் அதிபர் தேர்தலிற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமை
குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டியது நாடாளுமன்றத்தினதும் தேர்தல் ஆணைக்குழுவினதும் கடமை எனவும் தேர்தலை பிற்போடுவதற்கான ஏற்பாடுகள் எதுவும் அரசியலமைப்பில் இல்லை இதற்கு அரசியலமைப்பு ஏற்பாடுகள் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் அல்லது நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு ஆதரவு மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மாத்திரமே அதனை செய்ய முடியும் எனவும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியுமென்றால் நிச்சயமாக உங்களால் தேர்தலை நடத்த முடியும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |