பொதுமன்னிப்பு விவகாரத்தில் வெடித்த சர்ச்சை: ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்
ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியொருவரை விடுதலை செய்த சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) கடிதம் ஊடாக அறிவித்துள்ளது.
குறித்த கடிதத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்தி பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து தரப்பினரையும் அடையாளம் காணல் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடைமுறை அல்லது சட்ட சடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்பது முதலாவது கோரிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவன மறுசீரமைப்பு
நிறுவன மறுசீரமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தி சிறைச்சாலைகள் திணைக்களத்தின் விசாரணைகளில் வௌிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை பலப்படுத்தல் வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, சட்ட நடவடிக்கைகளை முன்கொண்டு செல்லும் போது, ஜனாதிபதி, நீதியமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய அதிகாரிகளுக்கு முழு ஆதரவை வழங்க சட்டத்தரணிகள் சங்கம் தயாராக இருப்பதாகவும் கடித்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சட்டவாட்சியை நிலைநிறுத்துவதற்கும் நீதி வழங்கும் கட்டமைப்பு நேர்மையுடனும் நியாயத்துடனும் மக்களுக்கு சேவையாற்றுவதை உறுதி செய்வதற்கு உறுதிபூண்டுள்ளதாகவும் அந்த கடிதத்தினூடாக ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        