பஸில் ராஜபக்சவால் ஒருபோதும் முடியாது - பொருளியல் பேராசிரியர் ஆணித்தரம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சினைப் பொறுப்பேற்பதன் ஊடாக தீர்வினைக் கண்டுவிட முடியாது என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் ஐ.பி.சி. தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார்.
இலங்கையின் ஏற்றுமதி மற்றும் உல்லாசத்துறை என்பன வீழ்ச்சியடைந்தமையினால் நாட்டுக்கான அன்னியச் செலவாணி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா ஜனாதிபதியாக ஆட்சிப் பெறுப்பேற்றவுடன் கொரோனா தொற்று உலக அரங்கில் பரவத் தொடங்கி இலங்கையையும் தாக்கியிருந்தது. இதனால் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் ஊடான ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தமையினால் அரசாங்கத்திற்கான அன்னியச் செலவாணியின் வருகை வீழ்ச்சியடைந்தது. ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கான வரி மூலங்கள் பாதிக்கப்பட்டமையினாலும் வருமான இழப்பு ஏற்பட்டிருந்தது.
இத்தகைய சூழல்நிலையில் ராஜபக்ஷ அரசாங்கம் சீனாவிடம் பாரிய தொகையினை கடனாக பெற்று வருவதுடன் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உள்நாட்டு வங்கிகளிடமும் கடனைப் பெற்றிருந்தது.
பிரண்டிக் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் ஆரம்பமான கொரோனா தொற்றுக் காரணமாக நாடு இரு தரம் முடக்கத்திற்குள்ளானமையினால் மக்களும் வெகுவாக பாதிக்கபட்ட நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பொருளாதாரம் அதலபாதாளத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் எரிபொருள் விலையேற்றம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் திடீரென அதிகரிக்கப்பட்ட அதிர்ச்சி மக்களை வெகுவாக பாதித்திருந்தது. எரிபொருள் விலையேற்றத்துடன் வாழ்க்கைச் செலவும் மின்னல் வேகத்தில் அதிகரித்திருந்து. ஆனால் பாதிக்கப்படுவது சிறு கைத்தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் அன்றாட கூலிகளுமே.
இத்தகைய சூழ்நிலையில் வீழ்ச்சியுற்றுள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதவற்கு ராஜபக்ஷாக்களின் முக்கிய கர்த்தாவான பஷில் ராஜபக்ஷவை நிதியமைச்சராக்குவதே சிறந்த தீர்வு என தென்னிலங்கை ஆளும் தரப்பு கடும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பஷில் ராஜபக்ஷ அரசாங்கத்தின் முக்கிய பதவியான நிதியமைச்சராக பதவியேற்றார். இவர் பதவியேற்ற கையுடன் எரிபொருள் விலை குறைவடையும், வாழ்க்கைச் செலவு குறைவடையும் என்று மணல்கோட்டை கட்டியவர்கள் மௌனம் காக்கின்றனர்.
ராஜபக்ஷக்களின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையேற்றம் மற்றும் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தை இராணுவ மயமாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு முன்னால் எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் ஆகிய தரப்புக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காவல்துறை கரம் கொண்டு அடக்கி ஒடுக்கப்பட்டு, சமூகத்திற்காகப் போராடியவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் ஆட்சியாளர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களும், ஊடகங்களும் தாக்குதலுக்குள்ளாகும் யுகம் மீண்டும் மலர்ந்துள்ளதாக தென்னிலங்கை சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.
இவ்வாறான சூழலிலேயே தனி மனிதனான ஸ்ரீலங்கா நிதியமைச்சர் பசில் ராஜபக்சவினால் இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப முடியாது என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் ஐ.பி.சி. தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார்.