அமெரிக்க குடியுரிமை : சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பசில்
இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்காக தனது அமெரிக்க குடியுரிமையை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச நீக்கவுள்ளதாக வெளியாகிய செய்திகளை அவர் நிராகரித்துள்ளார்.
இரட்டை குடியுரிமையை கொண்டுள்ள தான், பதவி ஆசைக்காக ஒருபோதும் அமெரிக்க குடியுரிமையை நீக்கப் போவதில்லை எனவும் இலங்கை மக்களுக்காக சேவை செய்ய வேண்டிய தேவை ஏற்படும் பட்சத்தில் குறித்த விடயம் தொடர்பில் யோசிப்பதாகவும் அவர் கூறினார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க குடியுரிமை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, சிறிலங்காவின் அதிபராக அல்லது பிரதமராக பதவி ஏற்பதற்காக அமெரிக்க குடியுரிமையை தான் இழக்கப் போவதில்லை.
அத்துடன், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான தன்னை சந்திக்க வேண்டுமென கடந்த டிசம்பர் மாதம் கோரியிருந்தார்..
இதன் போது, தான் மீண்டும் இலங்கைக்கு திரும்பியதும் ரணிலை சந்திப்பதாக உறுதியளித்ததாகவும் இதற்கமைய அண்மையில் இரு தரப்பினருக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கையின் தற்போதைய ஆட்சி
இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்களை ஒத்திவைக்க சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்பார்க்கின்றது.
இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஆட்சி இலங்கையில் தற்போது நடைபெறவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சி மாத்திரம் நடைபெறுவதாக பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |