எம்.பி அசித நிரோஷனவுக்கு சவால் விட்ட சட்டத்தரணிகள் சங்கம்!
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராகத் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன எகொடவித்தான முன்வைத்த கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை, ஆதாரமற்றவை மற்றும் துர்நோக்கம் கொண்டவை என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று (25-07-2026) நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் இடம்பெற்றது.
நாடாளுமன்றச் சிறப்புரிமை
இதில் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ராஜீவ் அமரசூரிய தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன எகொடவித்தான கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்து சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடாளுமன்றச் சிறப்புரிமைகளை பயன்படுத்திப் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தவே இத்தகைய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சட்டத்தரணிகள் சங்கத்திற்கு எதிரான இத்தகைய அரசியல் ரீதியான தாக்குதல்கள் ஒருபோதும் வெற்றிபெறாது.
சட்டத்தரணிகள் சங்கம்
இலங்கையின் சட்டச் சமூகம் என்றும் ஒற்றுமையுடன் திகழ்கிறது.
சட்டத் துறையின் சுதந்திரம் மற்றும் நேர்மைக்கு எதிராக வரும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாடாளுமன்றச் சிறப்புரிமைகளின் பாதுகாப்பு இல்லாமல் நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்து இந்தக் குற்றச்சாட்டுகளை மீண்டும் கூறுமாறு எம்பி அசித நிரோஷனவுக்கு சவால் விடுத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம், அவ்வாறு கூறினால் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இதேவேளை, மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசாங்கத்தின் முன்மொழிவு குறித்தும் சட்டத்தரணிகள் சங்கம் தனது நிலையான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தற்காலிகச் சூழ்நிலை
மேலும், “உயர் நீதிமன்றங்களைப் பாதிக்கும் அரசியலமைப்புத் திருத்தங்கள் தற்காலிகச் சூழ்நிலைகளுக்காகவோ அல்லது அவசர கோலத்திலோ கொண்டு வரப்படக் கூடாது.
தெளிவான நிறுவனத் தேவை, வெளிப்படையான நியாயப்படுத்துதல் மற்றும் துறைசார் பங்குதாரர்களின் பரந்த கலந்தாலோசனை இருக்கும் இடங்களில் மட்டுமே இத்தகைய திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

அரசியலமைப்பு நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை என்பது கொண்டு வரப்படும் திருத்தத்தின் உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, அது கொண்டு வரப்படும் நடைமுறையிலும் தங்கியுள்ளது.
எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் ஜனநாயகம், நீதித்துறை சுதந்திரம் மற்றும் போராடும் உரிமை உள்ளிட்ட மக்களின் உரிமைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |