"இது ஒன்றும் பிள்ளையானின் அலுவலகம் இல்லை" பொங்கி எழுந்த சாணக்கியன்
மட்டக்களப்பில் அரங்கேறும் பிரச்சினைகள் தொடர்பிலும் அங்கு நீண்டநாட்களாக இடம்பெறும் போராட்டம் தொடர்பிலும் புதிதாக பதவியேற்ற மாவட்ட அரசாங்க அதிபருக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் பட்டிப்பொங்கல் தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்து பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
பின்னர் போராட்டத்தின் இறுதியில் புதிதாக பதவியேற்ற மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
பிழையான தகவல்களை வழங்கிய அதிகாரிகள்
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரிடம் பண்ணையாளர்களின் 120 நாட்கள் போராட்டம் தொடர்பில் எமது செய்தியாளர் வினவிய போது, அது பற்றி தனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன் பண்ணையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் அங்கு நீண்ட நாட்களாக இடம்பெறும் போராட்டம் தொடர்பிலும் தான் கேட்ட போது போராட்டம் முடிவடைந்ததாக அதிகாரிகள் கூறியதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
கடுமையான வாக்குவாதம்
இந்த நிலையில், போராட்டகாரர்கள் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடிய வேளை மாவட்ட திணைக்கள அதிகாரி ஒருவர் சாணக்கியுடன் முரண்படும் வகையில் செயற்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.