நீரில் மூழ்கிய நிலையில் நபர் - காவல்துறை விசாரணையில் வெளியான தகவல்!
மட்டக்களப்பில் நீரில் மூழ்கி நபர் ஒருவர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சந்திவெளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு மீன் பிடிக்க சென்ற போதே இவர் பலியாகியுள்ளார். இன்று காலை நீரில் மூழ்கிய நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்றிரவு மீன்பிடிக்க சென்ற இவர், இன்று காலை வரை கரை திரும்பாததால், அவரது இரண்டு மகன்களும் தோணியொன்றில் சென்று தேடியபோது, வலையில் சிக்குண்ட நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்பு
அதனையடுத்து, தந்தையின் சடலத்தை கரைக்கு மீட்டு வந்த பிள்ளைகள் அதன்பின் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அதன் போது, தோணியிலிருந்து வலை வீசும் போது தவறி விழுந்து வலைக்குள் சிக்குண்டதால் அதிலிருந்து மீளமுடியாமல் நீரில் மூழ்கி மரணமடைந்திருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற மரணவிசாரணை அதிகாரி M.S.M.நஸீர் விசாரணைகளை முன்னெடுத்து, பிரேத பரிசோனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்ல காவல்துறையினருக்கு பணித்துள்ளார்.
பிரேத பரிசோனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு உயிரிழந்தவர் சந்திவெளி, வட்டையார் வீதியை சேர்ந்த கந்தையா பவானந்தன் வயது 43 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
