அரசியல் நிகழ்வுகளில் அரச உயர் அதிகாரிகள்? மட்டக்களப்பு கல்விச் சமூகம் தடுமாறுகிறதா? தடம் மாறுகிறதா?
பாடசாலைகள் மற்றும் பாடசாலை வளாகங்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் அதிகாரத்தை மாகாண ஆளுநர்களுக்கு வழங்குவதற்கான யோசனைக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட கல்விச் சமூகம் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் வரை ஆளும் கட்சியின் பங்காளி கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளீர் தின நிகழ்வில் கலந்து கொண்டு கட்சிக்கு ஆதரவு வழங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் தேர்தல் ஒன்று நடைபெற உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் மாவட்ட மற்றும் மாகாண அடிப்படையில் உயர் பதவிகளில் இருக்கும் பெண் அதிகாரிகள் எந்த அடிப்படையில் அரசியல் கட்சி ஒன்றின் நிகழ்வில் கலந்து கொண்டார்கள் என்ற கேள்வி எழுகிறது.
அரச நிர்வாக நடைமுறைகளை கடைப்பிடிக்காத அதிகார போக்கு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களின் உத்தரவுகளை பிற்பற்றாத, அரச நிர்வாக நடைமுறைகளை மீறிய செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இன்று வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் ராஜபக்சக்களின் அதிகாரமே நடைமுறையில் உள்ளது.
மாவட்ட செயலகம் தொடங்கி மாகாண கல்வி திணைக்களம் வரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தமிழ் மக்கள் நலன் சார்ந்து நடப்பதாக கூறும் கட்சிகள் அரச நிர்வாக நடைமுறைகளை மீறுகின்ற தவறான செயற்பாடுகளுக்கு வழியை உருவாக்கி கொடுப்பது நாளை வேறு ஒரு கட்சி அதிகாரத்திற்கு வரும் போது மாகாண, மாவட்ட அரச உயர் நிர்வாக அதிகாரிகளை இதே போன்று கட்சி தேவைகளுக்கும், கட்சி நடவடிக்கைகளுக்கும் பயன் படுத்தவே செய்வார்கள்.
அரசியல் கலப்பற்ற கல்வி நிர்வாகம், மாவட்ட அரச நிர்வாகத்தை உருவாக்க முடியாத அளவுக்கு ஆளும் கட்சி அமைச்சர்களின் அதிகார துஷ்பிரயோகம் மட்டக்களப்பு மாவட்டம் அரச அதிகாரிகளை கட்சி அரசில் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
கட்சி நிகழ்வுகளில் நிர்வாக அரச உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள கூடாது என உள்நாட்டலுவல்கள் அமைச்சின் தாபன விதிக் கோவைச் சட்டம் சொல்லி உள்ள நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிகழ்வில் நேற்று பல அரச உயர் அதிகாரிகளை காணக் கூடியதாக இருந்தது.
மாவட்டத்தில் உயர் பதவிகளில் உள்ளவர்கள் இதில் கலந்து கொண்டதன் ஊடாக மட்டக்களப்பு மக்களுக்கு ஒரு சமிஜையை காட்டியுள்ளனரா என்ற கேள்வி எழுகிறது.
நடுநிலையாக செயற்பட் வேண்டிய எதிர்கால மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளீர் தின நிகழ்வில் கலந்து கொண்டு அவர்களை பாராட்டி பேசிய பிறகு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியாக இருந்து கட்சிகளின் வாக்குகளை எப்படி பக்கச்சார்வின்றி அறிவிக்க முடியும்?
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அந்த பணிகளில் ஈடுபடும் உயர் அதிகாரிகள் ஒரு கட்சி சார்பாக செயற்படுவது மிகப்பெரிய ஜனநாயக மீறலாகும்.
எனவே அதிகாரத்தை கையில் வைத்துள்ளவர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டு மாவட்ட செயலகம், மாவட்ட கல்வி நிர்வாகங்களை கட்சியுடன் இணைத்து செயற்பட நிர்ப்பந்திப்பது மிக மோசமான அரசியல் அடக்குமுறையாகும்.