பச்சை நிறமாக மாறி வரும் மட்டக்களப்பு வாவி (படங்கள்)
தற்போது மட்டக்களப்பு வாவியின் பெரும்பாலான நீர்ப்பரப்பு “பூங்கறை” எனும் ஒருவித பச்சைப் படையால் சூழப்பட்டுள்ளதால் மட்டக்களப்பைச் சூழ அமைந்துள்ள மட்டக்களப்பு நெடுவாவி மாசடைந்து வருகின்றது.
இதன் காரணமாக சில இடங்களில் துர்நாற்றமும் வீசுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வாவியில் வலைவீசி மீன் பிடிக்க முடியாமலுள்ளதாகவும் இந்தப் “பூங்கறை”யில் ஒரு வித பசைத் தன்மை உள்ளதால் அதில் வலைகள் ஒட்டிக் கொள்வதாகவும் மீனவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
வருடாவருடம் இத்தகைய “பூங்கறை” எனும் பச்சை படர்தல் வாவியின் மேற்பரப்பில் சில நாட்களுக்குப் படர்ந்து பின்னர் இயற்கையாகவே மறைந்து விடுவதாகவும், ஆனால் இந்த வருடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்தப் “பூங்கறை” பச்சைப் படலம் வாவியின் மேல் படரத் தொடங்கி இன்னமும் அது மறையவில்லை என்றும் மீனவர்கள் கூறுகின்றனர்.
“பூங்கறை” பச்சைப் படலம்
இது தொடர்ந்து நீடிக்குமானால் இயற்கைக்கும் நீர் வாழ் உயிரினங்களுக்கும் அதன் விளைவாக மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் மீனவர்கள் அச்சப்படுகின்றனர்.
இது தொடர்பாக கிழக்குப் பல்கலைக் கழக விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியரும் நீர்வாழ் உயிரின ஆய்வாளருமான கலாநிதி பெரியதம்பி வினோபபாவிடம் வினவியபோது,
“இது இயல்பாகவே நடக்கும் நிகழ்வு என்றாலும், பயிர்ச் செய்கைக்கு இடப்படும் இரசாயன உரக்கலவைகளில் பொதிந்துள்ள நைற்ரோஜன் பொஸ்பேற் நீர் நிலைகளை அடையும்போது இத்தகைய பச்சைப் படலம் உருவாகிறது.
இம்முறை முதல் அரையாண்டில் குறிப்பாக மார்ச் மாதமளவில் பெய்ய வேண்டிய மழை கிடைக்காததால் இந்தப் “பூங்கறை” அப்படியே வாவியில் தொடர்ந்து நிலைபெற்றுள்ளது.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பாதிப்பு
அத்தோடு வாவி நீர் கடலில் கலக்க முடியாத வண்ணம் முகத்துவாரம் எனும் கடல் - வாவி முகவாய் தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த பச்சைப் படலம் வாவியின் மேற்பரப்பில் பல இடங்களில் பரவியுள்ளது.
தற்போதைக்கு இது நீர்வாழ் உயிரினங்களுக்கும் அதனை உண்ணும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பாதிப்புக்களைத் தரவில்லை என்றாலும் எதிர்காலத்தில் பாதிப்புக்கள் வராது என்று சொல்வதற்கில்லை.
விவசாயிகள் தேவைக்கு அதிகமாக இரசாயன உரத்தைப் பாவித்து அவை பயிர்களால் உறுஞ்சப்பட்டது போக மீதமானவை வாவியில் கலக்கின்றன. அத்தோடு வாவியில் கொட்டப்படும் கழிவுகளாலும் இத்தகைய சூழல் மாசடைதல் ஏற்படுகிறது” என்றார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)