வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு: நவம்பர் 15 முதல் மூன்று தினங்களுக்கு மழைவீழ்ச்சி
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் வளிமண்டலக் குழப்ப நிலை ஒன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
குறித்த வானிலையானது நாளை 11 மணியளவில் உருவாகக்கூடும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இந்த வளிமண்டலக் குழப்ப நிலை, அதனைத் தொடர்ந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும் பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 15, 16 மற்றும் 17
எவ்வாறாயினும், இந்த வானிலைத் தொகுதியின் தாக்கத்தால் எதிர்வரும் நவம்பர் 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் நாட்டின் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குறித்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றால், அது நாட்டின் கிழக்குக் கரையோரப் பகுதியை அண்மித்து வடக்கு நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு நகர்ந்தால் அதன் தாக்கம் இலங்கையில் தீவிரமாக உணரப்படலாம் எனத் தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |