இலங்கையில் மகப்பேற்று மரணம் -இலக்கு நிர்ணயித்த உலக சுகாதார ஸ்தாபனம்
இலங்கையில் 100,000 பிறப்புகளுக்கு 30 முதல் 34 தாய் இறப்புகள் பதிவாகின்றன என்று இலங்கை மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சனத் லான்ரோல் தெரிவித்தார்.
நாட்டில் வருடாந்தம் சுமார் 300,000 பிரசவங்கள் நடைபெறுவதாகவும், வருடத்திற்கு 120 முதல் 130 மகப்பேறு மரணங்கள் ஏற்படுவதாகவும் மருத்துவர் கூறினார்.
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 100,000 பிறப்புகளுக்கு 16 தாய்மார்கள் மரணமடைய உலக சுகாதார ஸ்தாபனம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக (WHO) அவர் தெரிவித்துள்ளார்.
பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்களினால் ஏற்படும் தாய் மரணங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கையாக தாய் இறப்பு தொடர்பான இரகசிய தரவுகளை அறிமுகப்படுத்தும் இலங்கை மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் நிறுவகத்தின் புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் மகப்பேறு இறப்புக்கான காரணங்களை பகுப்பாய்வு செய்யும் முறை 35 வருடங்கள் பழமையானது எனவும், 10 வருடங்களாக இலங்கையில் தாய் இறப்பு எண்ணிக்கை இதே எல்லைக்குள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மகப்பேறு இறப்பு குறித்த இரகசிய தரவு பகுப்பாய்வு முறை அறிமுகம் இன்று (10) குடும்ப நலப் பணியகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன மற்றும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் (பொது சுகாதாரம்) டொக்டர் சுசி பெரேரா ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
